Published : 05 Sep 2019 02:41 PM
Last Updated : 05 Sep 2019 02:41 PM

அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி தலைமையில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்; 6,500 புதிய வேலைவாய்ப்புகள்

முதல்வர் பழனிசாமி தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்காவில் முதல்வர் பழனிசாமி தலைமையில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 6500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

14 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதல் நாள் (29.08.19) சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டாவாது நாளில் (30.08.2019) லண்டன் நாடாளுமன்ற எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி. இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதல்வர், நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

3-வது நாளில் லண்டனில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை, எளிய வழியில் மின்கட்டமைப்பில் சேர்ப்பது எப்படி என்பது குறித்து, முதல்வர் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து செப். 1-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு, நேற்று முன்தினம், உலகம் முழுவதும் உள்ள தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, முதலீட்டுத் தூதுவர்களை உருவாக்கி 'யாதும் ஊரே' திட்டத்தை முதல்வர் நியூயார்க்கில் தொடங்கிவைத்தார்.

இந்நிலையில் நேற்று (செப்.4) 'யாதும் ஊரே' திட்டத்திற்கான கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமெரிக்காவின் சான் ஹூசே நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலிஃபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த தமிழ் அமைப்புகள் பங்கேற்றன. அதில், 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வானூர்தி ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்ய தமிழ்நாடு உகந்த மாநிலமாக திகழ்வதாகக் கூறினார். இக்கூட்டத்தில், லிங்கன் எலெக்ட்ரிக், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட 19 நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, சுமார் 2300 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு வர உள்ளதாக, தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 6500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகளை வழங்க டிஜிட்டல் ஆக்ஸிலரேட்டர் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x