Published : 05 Sep 2019 12:58 PM
Last Updated : 05 Sep 2019 12:58 PM

பாஜகவை திமுக வீழ்த்தவில்லை; மக்கள் தான் தோற்கடித்து விட்டார்கள்: ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்

பாஜகவை திமுக வீழ்த்தவில்லை எனவும், மக்கள்தான் தோற்கடித்து விட்டார்கள் எனவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான, வெள்ளக்கோவில் சாமிநாதன் திமுகவின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராவார். திமுகவின் இளைஞரணி துணைச் செயலாளராக இருந்த அவர், 2017-ல் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக ஆனபோது, சாமிநாதன் இளைஞரணிச் செயலாளரானார். இந்நிலையில், உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக்குவதற்காக முன்கூட்டியே, வெள்ளக்கோவில் சாமிநாதன் அப்பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பின் திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்புக்கு வந்தார்.

இந்நிலையில், வெள்ளக்கோவில் சாமிநாதனின் இல்லத் திருமண விழா இன்று (செப்.5) திருப்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "கருணாநிதிக்குப் பிறகு எங்களை வீழ்த்திய வெற்றித் தளபதி ஸ்டாலின்", என பேசினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"1967 ஆம் ஆண்டு திமுக அரியணை ஏறிய பிறகு தான் சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. பொறுத்தார் பூமி ஆள்வார். நாம் இப்போது பொறுத்துக்கொண்டிருக்கிறோம். அனைவரும் திமுக குடும்பக் கட்சி என சொல்கிறார்கள். நானும் இப்போது அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறேன். திமுக ஒரு குடும்பக் கட்சிதான்.

சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும் போது கூறினார். நாங்கள் அவர்களை வீழ்த்தி விட்டோம் என்று. நான் கூறுகிறேன், உங்களை வீழ்த்தவில்லை, தோற்கடித்துள்ளோம். அதுவும் நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர்.

பொருளாதாராம் என்பது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. முதல்வரோடு பெரும்பாலான அமைச்சர்களும் வெளிநாடு சென்றுள்ளனர். அதிமுக அமைச்சரவை சுற்றுலாத் துறை அமைச்சரவை போல உள்ளது. முதல்வர் பழனிசாமி ரூ.2000 கோடிக்கும் மேலாக முதலீடுகளைப் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 2 ஆம் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் புதிய தொழில் தொடங்கியிருப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய். முதல்வர் கூறிய மொத்த முதலீடும் தமிழகத்திற்கு வந்திவிட்டால், திமுக சார்பில் முதல்வருக்குப் பாராட்டு விழா கூட நடத்தத் தயார்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி , சட்டப்பேரவை தேர்தலிலும் கிடைத்தால்தான் தமிழக மக்களுக்கு விடிவு என்பது கிடைக்கும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x