

சிதம்பரம் கைது போன்ற நிலைதான் ஸ்டாலினுக்கு ஏற்படும் என எச்.ராஜா பேசிய விவகாரம் குறித்த கேள்விக்கு அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிப்பதில்லை என திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் உள்ளார். அடுத்து அமலாக்கத்துறையும் அவரைக் கைது செய்ய முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று இதுகுறித்துப் பேசிய எச்.ராஜா, ப.சிதம்பரம் கைது போன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவருக்கும் அதே நிலை ஏற்படும் என தெரிவித்திருந்தார்.
இதேபோன்ற கருத்தை இன்று அமைச்சர் ஜெயக்குமாரும் தெரிவித்து எச்.ராஜா கூறியதைச் சுட்டிகாட்டியிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் திருமண விழா ஒன்றில் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது குறித்து கேட்கப்பட்டபோது, அவர் விஜய்யை சந்திக்கட்டும், அமெரிக்க அதிபரைச் சந்திக்கட்டும், ரஷ்ய அதிபரைச் சந்திக்கட்டும். எங்களை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக ஆட்சி என்றும் தொடரும் என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து சென்னையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்.
நடிகர் விஜய்யை ஸ்டாலின் சந்தித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளாரே?
அது ஒரு திருமண விழாவில் சாதாரணமாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு. அவ்வளவுதான்.
திமுக இளைஞரணியின் உறுப்பினர் சேர்ப்பு எப்போது?
விரைவில் தமிழம் முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்த உள்ளோம். சென்னையில் நான் கலந்துகொள்கிறேன்.
சிதம்பரத்தின் நிலைதான் ஸ்டாலினுக்கும் ஏற்படும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளாரே?
அப்படியா சொன்னார்?
ஆமாம், அதுபற்றி?
அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அவரை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.