Last Updated : 05 Sep, 2019 11:21 AM

 

Published : 05 Sep 2019 11:21 AM
Last Updated : 05 Sep 2019 11:21 AM

அரசு செலவில் சுற்றுலா: முதல்வர், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்தை சாடும் திருமாவளவன்

தூத்துக்குடி,

"அரசு முடியப் போகின்ற தருணத்தில் முதல்வர், அமைச்சர்கள் அரசு செலவில் சுற்றுலா செல்ல திட்டமிட்டு பயணம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது" என தூத்துக்குடி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

முன்னதாக, ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மணோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சொக்கலிங்கம் ஆசிரியர் பணியை நிறைவு செய்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்ததாகத் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

சுதந்திரமான நிலைப்பாடு அல்ல.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இது அமலுக்கு வந்தால் வட மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த மக்களின் சதவிகிதத்தை பொருத்து உணவு பொருட்களை விநியோகிக்க வேண்டிய நிலை வரும். இத்திட்டம் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே சிக்கலையே உருவாக்கும். தமிழக அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு சுதந்திரமாக எடுக்கப்பட்ட நிலைப்பாடாக தெரியவில்லை" என்றார்.

அரசு செலவில் சுற்றுலா..

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்விக்கு, "அமைச்சர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதுமையாக இருக்கிறது ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்யவில்லை. இப்போது, அரசு முடியப் போகின்ற தருணத்தில் அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது அரசு செலவில் சுற்றுலா பயணமாக செல்ல திட்டமிட்டு மேற்கொண்டதாகவேத் தெரிகிறது. அவர்கள் சுற்றுப்பயணம் செல்வது தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருந்தால் அது வரவேற்கத்தக்கது.
தமிழக தொழில் துறை முன்னேற்றத்துக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக முதல்வர் கூறியிருக்கிறார். அவர் வந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும்" என்றார்.

பழிவாங்கும் பாஜக..

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கைது செய்யப்படுவார் என ஹெச்.ராஜா கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, "மோடி அரசு பலரை பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. அதனடிப்படையிலேயே ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் கருத்துக்கள் குறித்து கேள்விக்கு, "முதலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத் தலைவர் யாரென்று அறிவிக்கட்டும். அதன் பின்பு அது குறித்துப் பேசுகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

விரைவில் ஆர்ப்பாட்டம்..

இறுதியாக சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்து "சுங்கச்சாவடிக் கட்டண உயர்வு என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடி தொடங்கப்பட்டது குறித்தான அறிவிப்புப் பலகைகளை சுங்கச்சாவடி முன்பு வைக்க வேண்டும். இப்போது கட்டண உயர்வை அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x