Published : 05 Sep 2019 10:43 AM
Last Updated : 05 Sep 2019 10:43 AM

வலசை தொடங்கிய `வனத்தின் பேரரசன்’- முன்கூட்டியே துவங்கிய இடப்பெயர்ச்சி; தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறை

இந்த உலகில் சிலவற்றை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்கவே செய்யாது. கடல், ரயில் என்ற இந்தப் பட்டியலில் வனத்தின் பேரரசனான யானைக்கும் இடமுண்டு. காட்டுக்குள் கம்பீரமாய் உலவிக் கொண்டிருக்கும் யானைகளின் வலசைப் பாதையை ஆக்கிரமித்ததன் விளைவே, யானை- மனித மோதல்கள். பல நூறு ஆண்டுகளாய் வலசை செல்லும் யானைகளின் பாதையை மறிப்பது சரியானதுதானா? இதை ஒவ்வொருவரும் உணர்ந்தாலே, யானைகளை அழிவிலிருந்து காக்கலாம்.

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் தொடங்கி, மார்ச் மாதம் வரை கேரள காடுகளில் இருந்து மேட்டுப்பாளையம் வனப் பகுதி வழியே சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு யானைகள் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தைக் காட்டிலும் ஒரு மாதம் முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் மாத இறுதியிலேயே யானைகளின் இடப்பெயர்ச்சி தொடங்கிவிட்டது.

கேரள காடுகளில் பெய்யும் கனமழை மற்றும் மண் சரிவுகள் காரணமாக, நான்கு வாரங்கள் முன்னதாகவே தமிழக காடுகளை நோக்கி யானைகள் தங்களது வலசைப் பயணத்தை தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது. மேலும், வழக்கமான முறையில் சிறு கூட்டங்களாக யானைகள் செல்லாமல், பெரிய கூட்டங்களாக ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கில் யானைகள் நகரத் தொடங்கியுள்ளன.

இதனால், கேரள காட்டை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை மற்றும் சிறுமுகை வனச் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகளின் நடமாட்டத்தைக் காணமுடிகிறது.

தங்களது முன்னோர் காட்டிய பாதையில் காலம்காலமாக வலசை செல்லும் யானைகள், அவற்றின் வழித்தடம் மறிக்கப்பட்டாலோ அல்லது இடையூறு ஏற்படுத்தினாலோ குழப்பமடைந்து, வழிதவறி வனத்தையொட்டியுள்ள ஊர்களுக்குள் புகுந்து விடும். இதனால் யானை-மனித மோதல்கள் அதிகரித்து, பயிர் மற்றும் உயிர் சேதங்கள் தவிர்க்க இயலாததாகி வருகிறது.
யானைகளின் கோபத்தால் மனிதர்களும், மனிதர்களின் கோபத்தால் யானைகளும் காயமடைவதும், இறப்பதும் தொடர்கிறது. யானைகளின் வலசைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்க, யானைத் தடுப்பு அகழிகள், சோலார் மின் வேலிகள் என வனத் துறை எடுத்த முயற்சிகள், முழுமையான பலனைத் தரவில்லை.

இதற்கு, யானைகளின் வலசை தொடங்கிய இந்த சில நாட்களில், கோவை மாவட்டத்தில், யானை தாக்கி இருவரும், மனித தவறுகளால் இரு யானைகளும் பலியாகியுள்ளதை உதாரணமாகக் கொள்ளலாம். இதுதவிர, ஏராளமான வாழை, தென்னை, சோளம் உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன.

இனி வரும் மாதங்களில் இந்தப் பிரச்சினை தீவிரமடையும் என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், தங்களது பயிர் மற்றும் உயிரைக்காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகளின் வலசைக் காலங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் வனத் துறையினர் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

மலையடிவாரக் கிராமங்களில் வசிப்போர் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம் என்று எச்சரிக்கும் வனத் துறையினர், `இருள் சூழ்ந்த பின்னர் வனத்தை ஒட்டியுள்ள இடங்களில் நடமாடக் கூடாது, அதிகாலையில் இயற்கை உபாதைகளுக்காக புதர்மண்டியுள்ள இடங்களுக்குச் செல்லக்கூடாது, யானைகளைக் கண்டால் வனத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும், தாமாக அவற்றை விரட்ட முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், வனம் சார்ந்த சாலைகளில் யானைகள் கடந்து சென்றால், அவற்றை இடையூறு செய்யாமல் பொறுமை காக்க வேண்டும், எந்தக் காரணத்தைக் கொண்டும் யானைகள் வலசை செல்லும் பாதையில் குறுக்கிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், வீட்டின் வெளியே திறந்த வெளியில் உறங்குவது, யானைகள் விரும்பி உண்ணும் பலாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை வீட்டில் இருப்பு வைப்பது, இரவு நேரங்களில் மதுபோதையில் நடமாடுவது கூடாது’ என்றெல்லாம் வலியுறுத்துகின்றனர்.

மேலும், ஊருக்குள் யானைகளின் நடமாட்டம் இருப்பது தெரிந்தால், உடனடியாக 24 மணிநேரமும் செயல்படும் “1800 4254 5456” என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்துகின்றனர்.

யானைகளின் பின்னே சப்தமிட்டபடி ஓடிச் சென்று விரட்டுவது, பட்டாசுகளை வெடிப்பது, அவை வெளியேற வழியில்லாமல் கூட்டமாக சுற்றி வளைப்பது போன்றவை குற்றமாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

காடுகளின் காவலனான யானைகள், இயற்கை நிகழ்வாக வலசை செல்வதை எந்த விதத்திலும் இடையூறு செய்யாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதுடன், இடம் மாறும் யானைகளுக்கும், இதைக் கண்காணிக்கும் வனத் துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் இயற்கை நல ஆர்வலர்கள்.

வன எல்லைகளில் மண் மூடிக் கிடக்கும் அகழிகளை ஆழப்படுத்துவது, சோலார் மின் வேலிகளை சீரமைப்பது, யானை விரட்டும் பணியில் கூடுதல் வனப் பணியாளர்களை களம் இறக்குவது, யானைகள் அதன் வழித்தடப் பாதையில் செல்கிறதா எனத் தொடர்ந்து கண்காணிப்பது, வனத்தை விட்டு அவை வெளியேறாமல் தடுப்பது போன்றவை, வலசைக் காலங்களில் ஏற்படும் யானை-மனித மோதல்களையும், அதனால் ஏற்படும் விரும்பதகாத நிகழ்வுகளையும் கட்டுப்படுத்தும். காடுகள் ஆக்கிரமிப்பு, யானைகளின் வலசைப் பாதையில் செயற்கையாக ஏற்படுத்தப்படும் குறுக்கீடுகள், தடுப்புகள், வரைமுறையின்றி அமைக்கப்பட்டு வரும் சட்டவிரோத மின்வேலிகள் போன்றவற்றை கடும் நடவடிக்கை மூலம் தடுத்தால் மட்டுமே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x