Published : 05 Sep 2019 10:40 AM
Last Updated : 05 Sep 2019 10:40 AM

ஆசிரியர் தினம்: சனாதனக் கல்விக் கொள்கையை முறியடிக்க உறுதியேற்போம்; திருமாவளவன்

தொல்.திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

சனாதனக் கல்விக் கொள்கையை முறியடிக்க ஆசிரியர் தினமான இன்று உறுதியேற்போம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (செப்.5) வெளியிட்ட அறிக்கையில், "குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுவதே ஆசிரியர் தினமாகும். ஆசிரியராகப் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக உயர்ந்த பெருமைக்குரியவர். அவர், ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது என்பதை உணர்த்தும் வகையில்தான் தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அதன்படியே, ஆண்டுதோறும் நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் ஆசிரியரைப் போற்றும் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களே அடுத்த தலைமுறையையும், வருங்கால தேசத்தையும் வடிவமைக்கும் ஆற்றல் வாய்ந்த சிற்பிகளாக விளங்குகின்றனர். எனவே, ஆசிரியர்களை வெறுமென அரசு ஊழியர்களாக மட்டுமே மதிப்பிட இயலாது. மாணவச் சமூகத்தை ஒரு மகத்தான ஆற்றலாக மாற்றும் மாபெரும் வித்தகர்களே ஆசிரியர்கள். எனவே, பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் வணக்கத்துக்குரியவர்களாவர். இத்தகைய பெருமைக்குரிய ஆசிரியர்கள் யாவருக்கும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன், இந்த நன்னாளில் இந்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை என்னும் சனாதனக் கல்விக் கொள்கையை நாம் தெளிவுறப் புரிந்துகொள்ள வேண்டும். இது எளிய மக்களுக்கு எதிரானது. மாநில அரசுகளுக்கு எதிரானது. மீண்டும் குலத்தொழில் கல்வியைத் திணிக்கும் சூது நிறைந்தது. ஆகவே, இந்த சனாதனக் கல்விக் கொள்கையைப் பற்றிய புரிதல்களையும் விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு ஜனநாயக்த்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருக்கும் உள்ளது. குறிப்பாக, இதில் ஆசிரியர்களுக்கும் தவிர்க்க இயலாத கடமை உள்ளது. ஜனநாயகபூர்வமான கல்விக் கொள்கைக்குத் தார்மீகமான நல்லாதரவை வழங்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு என விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இந்நிலையில், மோடி அரசின் சனாதனக் கல்விக்கொள்கையான தேசிய கல்விக்கொள்கையை முறியடிக்க ஆசிரியர் தினமான இன்று அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதியேற்போம்.

எதிர்கால இந்தியாவை ஜனநாயக இந்தியாவாகக் கட்டமைக்கும் உயரிய பெருமைக்குரியவர்களான ஆசிரியர்கள் யாவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்", என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x