Published : 05 Sep 2019 10:37 AM
Last Updated : 05 Sep 2019 10:37 AM

வலியைப் போக்கும் கருணை இல்லம்!- ஏழை குழந்தைகளுக்கு அதிநவீன புற்றுநோய் சிகிச்சை

ஆர்.கிருஷ்ணகுமார்

சின்ன சின்னப் பூக்கள் வாடியிருப்பதைக் கண்டாலே பலருக்கும் மனம் கனத்துப் போகும். உலகம் அறியா பிஞ்சுக் குழந்தைகள் கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கக்கூட தைரியம் வேண்டும். இந்த சூழலில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 850 குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கியுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, தற்போது அந்த சிகிச்சைக்காக அதிநவீன கருவிகளையும் தருவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியமான வாழ்வே முதன்மை நோக்கமாக உள்ளது. ஒருவேளை நோய் தாக்கப்பட்டால், யாராக இருந்தாலும் தைரியம் கொஞ்சம் குறைந்துவிடும். குறிப்பாக, புற்றுநோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக சிலர் எண்ணுவார்கள். ஆனால், நவீன மருத்துவமும், தொழில்நுட்பமும் புற்றுநோயைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து நம்மை மீட்கும் என்பதுதான் உண்மை. மரபு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணிகளால் புற்றுநோய் உண்டாகிறது. இதில் பல வகைகள் உள்ளன. ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால், அதைக் கட்டுப்படுத்துவது எளிது.

நாடு முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனினும், இதற்குத் தீர்வாக அதிநவீன சிகிச்சைகளும் வந்துள்ளன. கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் கொங்கு மண்டலத்தில் மட்டுமின்றி, தமிழகத்திலேயே குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது.

இங்கு 2001-ல் புற்றுநோய்ப் பிரிவு தொடங்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு நவீனக் கருவிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள ஒருங்கிணைந்த புற்றுநோய் அறுவைசிகிச்சை மையத்தில், அதிநவீன வசதிகள் உள்ளன. அதேசமயம், இங்கு ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு அச்சாரமிட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் என்பது ஆச்சரியப்படுத்தும் தகவல்.

ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்துவைக்குமாறு அப்துல்கலாமுக்கு அழைப்புவிடுத்தபோது, “மக்களின் நலனுக்காக ஏதாவது செய்வதாக உறுதியளித்தால், திறப்பு விழாவுக்கு நான் வருகிறேன்” என்று கூறியுள்ளார். இதனடிப்படையில், ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ஓர் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் இதுவரை ஏறத்தாழ 850 குழந்தைகளுக்கும் மேலாக, இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கலாமால் தொடங்கிவைக்கப்பட்ட `தீபம்’ என்ற திட்டம் மூலம் இதுவரை சுமார் 3 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

2012-ல் இரண்டாவது முறையாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்த கலாம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த குழந்தைகளை சந்தித்து உரையாடினார். ஏறத்தாழ 100 குழந்தைகளிடம் பேசிய அவர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை குறித்து கேட்டறிந்துள்ளார்.

2001-ல் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது என்றாலும், 2003-ல் நவீனக் கருவிகளுடன் தனி மையமாக மாற்றப்பட்டது. 2004-ல் புகையிலைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவு, 2006-ல் குருத்தணு (ஸ்டெம் செல்) மாற்றும் சிகிச்சை, 2010-ல் புற்றுநோயாளிகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் வாகனம், 2016-ல் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு மையம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்ல, புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பிரத்யேக இணையதளம், புகைப்பிடித்தலுக்கு எதிரான மொபைல் ஆப், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மொபைல் ஆப், தனி ஹெல்ப்லைன் எண், விழிப்புணர்வு இ-புத்தகங்கள், புற்றுநோய்க்கான பிரத்யேக யுடியூப் சேனல், டிஜிட்டல் விழிப்புணர்வு பதாகைகள், டிஜிட்டல் அனிமேட்டட் இணையதளம், டேபிள் டாப், டிஜிட்டல் அனிமேட்டட் வெப்சைட், புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த குறும்படம் வெளியீடு, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக் கையேடு வெளியீடு என விழிப்புணர்வுப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது இந்த மருத்துவமனை. இதுகுறித்து ஸ்ரீராமகிருஷ்ணா அண்டு சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசாமி, ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் பி.குகன், மருத்துவமனை முதன்மை நிர்வாக அதிகாரி (சிஓஓ) வி.ராமகிருஷ்ணா, மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் ஆகியோரிடம் பேசினோம்.

புற்றுநோய்க்கு எதிரான போர்!

“அண்மையில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே செய்தியாளர்களிடம் பேசும்போது, `புற்றுநோய்க்கு எதிராக போர் தொடுக்க விரும்புகிறேன், அனைவரும் ஒன்றிணைந்தால் அந்தப் போரில் நாம் வெல்வது உறுதி’ என்று தெரிவித்தார். இதை மனதில் கொண்டு, கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில், புற்றுநோய்க்கான அதிநவீன கருவிகளை தருவித்து, ஒன்றிணைந்த சிகிச்சைகளை வழங்குகிறோம்.

நாட்டிலேயே ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும்தான், புற்றுநோயைக் கண்டறிந்து, நவீன சிகிச்சை தரும் 3 லீனியர் ஆக்சலரேட்டர் மற்றும் நவீன பெட் சிடி கருவிகள் உள்ளன. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஏற்கெனவே இரு லீனியர் ஆக்சலரேட்டர் கருவிகள் உள்ள நிலையில், மூன்றாவது கருவியின் செயல்பாட்டை வரும் 7-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சவுபே தொடங்கிவைக்கிறார்.

கதிர் வீச்சியல் சிகிச்சை முறையில் தற்போதைய அதிநவீன தொழில்நுட்பம், எலக்டா இன்ஃபினிட்டி டிஜிட்டல் லீனியர் ஆக்சலரேட்டர் கருவியாகும். கொங்கு மண்டலத்திலேயே முதல்முறையாக ராமகிருஷ்ணா மருத்துவமனையில்தான் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி மூலம்,புற்றுநோய் பாதிப்புள்ள குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும், மிகத் துல்லியமாக லேசர் சிகிச்சை அளிக்க முடியும். பிற பகுதிகள் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. பழைய முறையில் 20 நிமிடங்களுக்குத் தர வேண்டிய லேசர் சிகிச்சையை, இந்த முறையில் 5 நிமிடங்களில் அளிக்க முடியும். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை 4-டி முறையில் படம் பிடித்து அறிந்து, துல்லியமான சிகிச்சையை, குறைந்த கதிர்வீச்சில் வழங்குவதே இதன் சிறப்பம்சம்.

இதேபோல, கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, குழந்தைகளுக்கான அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைப் பிரிவையும், வரும் 7-ம் தேதி மத்திய இணை அமைச்சர் திறந்துவைக்கிறார். ஏற்கெனவே இங்கு 16 வயதுக்கு உட்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ரூ.70 லட்சம் மதிப்பிலான கதிர்வீச்சு சிகிச்சை இலவசமாக அளிக்கப்படும். இன்னும் அதிக அளவிலான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த மையம் உதவியாக இருக்கும்.

மேலும், ஜி.இ. விப்ரோ ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து, மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சி மையத்தையும் தொடங்க உள்ளோம். இதில், செவிலியர், பயோ மெடிக்கல் பொறியாளர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு, அதிநவீன மருத்துவக் கருவிகளைக் கையாளுதல், அவற்றை திறம்பட பயன்படுத்துதல், நோயாளிகளை கூர்ந்து கவனித்தல், வெவ்வேறு உபகரணங்களைப் பயன்படுத்துதல் குறித்தெல்லாம் பயிற்சி அளிக்கப்படும்.

நோய் கண்டறியும் கருவியை இயக்குதல், கருவிகளில் ஏற்படும் சிறு பழுதுகளை சரி செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும். இதில் பயிற்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x