

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை செலுத்தாத நிறுவனங்களிடமிருந்து அவற்றை வசூலிக்க ஆகஸ்ட் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இது குறித்து, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வருங்கால வைப்பு நிதிக்காக (பி.எப்.) தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையை சில நிறுவனங்கள் முறையாக செலுத்துவதில்லை.
இவ்வாறு செலுத்தாத நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக ஆகஸ்ட் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமின் போது நிலுவைத் தொகை வைத்துள்ள தொழில் நிறுவனங்களிடமிருந்து அத்தொகை வசூலிக்கப்படும்.
நிலுவைத் தொகை செலுத்தாத நிறுவனங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் காவல் துறை மூலம் கைது நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும்.
எனவே, பி.எப். பணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் உடனடியாக செலுத்தி, சட்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.