Published : 04 Sep 2019 09:38 PM
Last Updated : 04 Sep 2019 09:38 PM

 சகபோட்டியாளர்கள் தொந்தரவு; வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்: பிக்பாஸ் மீது மதுமிதா போலீஸில் புகார்  

தன்னை போட்டியாளர்கள் தொல்லை கொடுத்ததாகவும், பிக்பாஸ் வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும், கமலும் கண்டுக்கொள்ளவில்லை என நடிகை மதுமிதா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 பங்கேற்பாளர் மதுமிதா கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். திடீரென நிர்வாகத்தை மிரட்டுவதாக கிண்டி போலீஸில் மதுமிதா மீது பிக்பாஸ் நிர்வாகம் புகார் அளித்தது.

இது முற்றிலுமாக பொய் புகார், முன்னர் விஜய் டிவி நிர்வாகம் உங்களுக்கான பேமெண்ட் அனைத்து விஷயங்களையும் நாங்கள் விரைவாக செட்டில் செய்து விடுகிறோம், நீங்கள் உங்களுக்கான இன்வாய்ஸ் கொடுத்து விடுங்கள் என்று சொன்னதை அடுத்து நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்தோம். அதன்பின்னர் ஏன் இப்படி புகார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் மதுமிதா தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகாலமாக நான் சினிமாவில் இருக்கிறேன். எந்த காலத்திலும் நான் யார் மீதும் புகார் அளித்ததில்லை, என் மீதும் யாரும் புகார் அளித்ததில்லை. இந்த விவகாரத்தில் விஜய் டிவி நிர்வாகமும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்சாரும் தலையிட்டு சுமூகமாக ஒரு முடிவை கொண்டுவரணும் என்பது எனது விருப்பம்.

எந்த கேள்விக்கும் இப்போது நான் எதுவும் சொல்லக்கூடாது. அவர்கள் ஒரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்கள், அதில் உங்கள் அனைத்துக்கேள்விகளுக்கும் நான் கட்டாயம் பதில் அளிக்கிறேன். அந்த பிரஸ்மீட்டை சீக்கிரமாக வைக்கச்சொல்லி நானே வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திடீரென மதுமிதா பிக்பாஸ் நிறுவனம், விஜய் தொலைக்காட்சி மீது நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின்மீது போலீஸார் சிஎஸ்ஆர் அளித்துள்ளனர். மதுமிதாவின் புகாரில் இருப்பது குறித்து போலீஸார் பதிவு:

“விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்ததாகவும் 100 நாட்கள் இருந்து வெற்றி பெற வேண்டிய அப்போட்டியில் 56 வது நாளில் தனது கருத்தை தெரிவித்ததற்கு, அப்போட்டியில் உள்ள சக போட்டியாளர்கள் தன்னை ஹராஸ்மெண்ட் செய்ததாகவும், இதை நிறுவனமும் தொகுப்பாளரும் கண்டிக்கவில்லை என்றும், இதன் காரணமாக தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அப்போட்டியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி விட்டதாகவும், மேற்படி நிறுவனமும் தொலைக்காட்சியும் தனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விதித்ததாகவும், மேலும் தன்னை பற்றி தவறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் செய்யக்கூடாது எனவும் மேற்படி நிறுவனங்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு புகார்”

என பதிவிட்டுள்ளனர். புகாரின்மீது போலீஸார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x