Published : 04 Sep 2019 08:01 PM
Last Updated : 04 Sep 2019 08:01 PM

பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைத்தால் ஓராண்டு சிறை; ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை,

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்கள் மீது ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு விளம்பரப் பதாகைக்கு ரூ.5,000/- வீதம் தண்டத்தொகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைக்க சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட வேண்டும் என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நாள் 19.12.2018-ல் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைக்க இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் காலங்களில் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளும்பட்சத்தில், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 விதி Tamil Nadu Urban Local Bodies (Permission for Erection of Digital Banner and Placards) Rules 2011 தெரிவித்துள்ள பின்வரும் சட்டம் மற்றும் விதிமுறைகளை பொதுமக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

(அ) ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும் படிவம்-1யைப் பூர்த்தி செய்து அனுமதி கோரும் நாளுக்கு இரண்டு (2) நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடையின்மைச் சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடமிருந்து அதற்கான தடையின்மைச் சான்று, அமைக்கப்பட உள்ள இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

(ஆ) ஒவ்வொரு அனுமதிக்கும் (விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள்) அனுமதி கட்டணம் ரூ.200/-க்கான வரைவோலை ((Demand Draft) மற்றும் ஒவ்வொரு அனுமதிக்கும் காப்பீட்டு தொகை ரூ.50/-க்கான வரைவோலை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி அவர்கள் பெயரில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

(இ) விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் பின்வரும் அட்டவணையில் கண்டவாறு சாலையின் அகலத்தைப் பொறுத்து அனுமதி வழங்கப்படும்.

சாலை அகலம் (அடி) அனுமதிக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் / விளம்பரத் தட்டிகள் அளவு
100 அடிக்கு மேல் 15 அடி (உயரம்) 24 அடி (அகலம்). 60 முதல் 100 வரை 12 அடி (உயரம்) 20 அடி (அகலம்). 40 முதல் 60 வரை 10 அடி (உயரம்) 16 அடி (அகலம்). 20 முதல் 40 வரை 8 அடி (உயரம்) 5 அடி (அகலம்). 10 முதல் 20 வரை 3 அடி (உயரம்) 2.5 அடி (அகலம்). சாலையின் மையத்தடுப்பில் 4 அடி (உயரம்) 2.5 அடி (அகலம்).

ஈ) விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் நடைபாதை ஓரமாக அமைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் இருபுற சாலையின் நடுவில் (Centre Median) அமைக்கக் கூடாது. 10 அடிக்கும் குறைவாக நடைபாதை இருக்கும் சாலைகளின் இரண்டு புறங்களும் வைக்க அனுமதி வழங்கப்படமாட்டாது. நடைபாதைகளின் குறுக்காகவோ அல்லது சாலையின் குறுக்காகவோ அமைக்கப்படக் கூடாது. நடைபாதை அல்லது சாலைக்கு இணையாக அமைக்க வேண்டும்.

(உ) ஒரு விளம்பரப் பதாகை அல்லது விளம்பரத் தட்டிக்கும் மற்றொன்றுக்கும் இடையே குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நீளத்தில் அமைக்கப்பட வேண்டும்.

(ஊ) கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வெட்டுகள், சிலைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சாலை சந்திப்பு அல்லது சாலையின் ஓரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைக்கப்படக் கூடாது.

(எ) விளம்பரப் பதாகைகளின் கீழ் பகுதியில் அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், அச்சகத்தின் பெயர் குறித்து தவறாது குறிப்பிடப்பட வேண்டும்.

(ஏ) அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் மற்றும் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையிலே அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையாகக் கருதி அவை முற்றிலுமாக அகற்றப்படும்.

(ஐ) அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுற்ற உடன் உடனடியாக விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைத்தவர்களே பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்.

(ஒ) விதிகளுக்கு மாறாக அமைத்தாலோ, பெருநகர சென்னை மாநகராட்சியிடமிருந்து முறையாக அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டாலோ, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக அமைத்தாலோ மற்றும் அனுமதி வழங்கப்பட்ட அளவை விட கூடுதலான அளவில் அமைத்தாலோ, மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைத்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு எண்.326-ஐ ன்படி காவல்துறையில் புகார் தெரிவித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஓராண்டு சிறை தண்டனை அல்லது ஒவ்வொரு விளம்பரப் பதாகைகளுக்கும் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) அபராதம் விதித்தல் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே (பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள்) விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகளை அச்சடிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், விளம்பரப் பதாகைகளில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் அச்சடிக்கும் பணியினை மேற்கொள்ளும் பட்சத்தில் அதன் கீழ்ப்பகுதியில் அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், அச்சகத்தின் பெயர் குறித்து தவறாது குறிப்பிடப்பட வேண்டும்.

அவ்வாறு அனுமதி பெறாமல் விளம்பரங்களை மேற்கொள்ள அச்சடிக்கும் பணியின் பொருட்டு தங்களிடம் வரும் பட்சத்தில் அவற்றில் அச்சடிக்கும் பணியினைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. விளம்பரப் பதாகைகளின் கீழ் பகுதியில் எந்த ஒரு விவரமும் குறிப்பிடப்படாமலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விளம்பரப் பதாகைகளில் விளம்பரங்களை மேற்கொள்ளும் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்க விதிகளின்படி உரிய சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேற்கண்ட விதிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள், டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு சென்னை மாநகராட்சி கடந்த 21.02.2019 அன்று கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைக்க உயர் நீதிமன்ற இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளும்பட்சத்தில், மாநகராட்சியில் முறையான அனுமதி பெற்று பொதுமக்கள், தனியார், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் பிரிண்டிங் சங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள் மேற்குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தவறும் பட்சத்தில் அவ்விளம்பரப் பதாகைகள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அமைப்பவர்கள் மீது ஒராண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு விளம்பரப் பதாகைக்கு ரூ.5,000/- வீதம் தண்டத்தொகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக எச்சரிக்கப்படுகிறது”.

இவ்வாறு ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x