

மதுரை,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) மதியம் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டம் சூழ்ந்து நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கே அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு 26-க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. சமீபத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்பிரிவும் புதிதாக தொங்கப்பட்டது.
இடநெருக்கடியால் கோரிப்பாளையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் மருத்துவக்கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகிய மூன்று இடங்களில் அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்படுகிறது.
இதில், கோரிப்பாளையம் பழைய கட்டிடப்பிரிவு 75 ஆண்டிற்கு முன் கட்டப்பட்டது. இதில், வார்டு எண் 227-ல் செயல்படும் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில்தான் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
வார்டு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் உள்நோயாளிகள் அச்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் தீ விபத்து என்பது தெரியவந்ததால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நோயாளிகள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். நடக்க முடியாத நோயாளிகள் கூச்சலிட்டனர். அவர்களை உறவினர்கள் தூக்க முடியாமல் கைத்தாங்கலாக பதட்டத்துடன் வெளியேற்றினர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து 227-வது வார்டில் பிடித்த தீ அடுத்தடுத்த வார்டுகளுக்கு பரவாமல் தடுத்தனர். நோயாளிகளும் உயிர் தப்பினர். மருத்துவமனையில் நடக்க இருந்த பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தால் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக வைக்கப்பட்டிருந்த மருத்துவப்பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக தீயை அனைத்து விட்டதாகவும் தெரிவித்தது.
ஆனால், தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள், இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதற்கான அறிகுறி தெரியவில்லை என்று கூறினர்.
ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன் இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த 3 நோயாளிகள் உயிரிழந்தனர்.
தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளால் அடிக்கடி மின்கசிவு, தீ விபத்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் பழுது போன்ற பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
227-வது வார்டில் சிகிச்சைப்பெற்ற நோயாளிகள் கூறுகையில், ‘‘மதியம் சாப்பிட ஆரம்பித்திருந்தோம். திடீரென்று ஒரே புகைமூட்டமாக இருந்தது.வார்டில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், எங்களை ஓடுங்கள் ஓடுங்கள் என்றனர். எங்களுக்கு உயிர் பயம் ஏற்பட்டது. அச்சத்தால் நடக்க முடிந்தவர்கள் எழுந்து ஓடினர். நடக்க முடியாதவர்களை தூக்க முடியாமல் அவருடன் வந்தவர்கள் தவித்தனர். அந்தநேரத்தில் வார்டிலே ஓரே அலறல் சத்தமும், கூச்சலும் ஏற்பட்டது. தீ விபத்து பெரியளவில் நடக்காததால் உயிர் தப்பினோம்’’ என்றனர்.
தீ பிடிக்கவில்லை; புகைதான் வந்தது..!
மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் சங்குமணி கூறுகையில், "227-வது வார்டில் தீ விபத்து இல்லை. அதன் அருகே உள்ள அறையில் நோயாளிகள் பெட்ஷீட், தலையணை உள்ளிட்ட பொருட்களில் இருந்தே புகை வந்தது. அதைப்பார்த்து நோயாளிகள் பயந்துவிட்டனர். நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள், யாரோ பீடி குடிக்க பயன்படுத்திய தீக்குச்சியை அணைக்காமல் போட்டிருக்கலாம். அதனால் தலையணை, பெட்ஷீட் புகைந்திருக்கலாம்" என்றார்.
போலீஸார், மருத்துவமனையில் நடந்த தீ விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
- எஸ்.சீனிவாசகன்.