

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததை அடுத்து அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்ககோரி தொடரப்பட்ட வழக்கில் கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிப்பெற்றார். அந்தத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அவரது தேர்தல் வழக்கில், கூறியுள்ளதாவது: “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி,போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக வழக்கு தொடர உரிமை உள்ளதாகவும்,அந்த வகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு படிவத்தில், சிங்கப்பூர் பிரஜையான அவரது கணவர் அரவிந்தனின் வருமானத்தை பற்றி குறிப்பிடவில்லை.
மக்கள் ஒரு வேட்பாளரை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வேட்புமனுவில் வருமான விவரங்கள் கேட்கப்படும் நிலையில், வேட்பாளர் கனிமொழி தன் கணவர் வருமானத்தை மறைந்தது தவறு, எனவே கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்”. எனவும் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.