Published : 04 Sep 2019 03:38 PM
Last Updated : 04 Sep 2019 03:38 PM

மொத்த அமைச்சரவையும் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளது: ஸ்டாலின் விமர்சனம்

சென்னை

ஒரு சுற்றுலா அமைச்சரவையாக அதிமுக அமைச்சரவை மாறியிருக்கின்றது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.4), அண்ணா அறிவாலயத்தில் மேலாளர் பொறுப்பில் இருக்கும் பத்மநாபனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசியதாவது:

"இன்றைக்கு நாடு எங்கே போய்க்கொண்டிருக்கின்றது என்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றோம். இந்தியாவின் பொருளாதரம், 5 சதவிகிதத்திற்கு கீழே போயிருக்கக்கூடிய ஒரு கொடுமை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

27 ஆண்டுகாலமாக இந்தியாவுக்கு இல்லாத ஒரு கொடுமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது. அந்த செய்திகளை மூடி மறைக்கக்கூடிய திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால், சமூகவலைதளங்களில் அவை எல்லாம் வெளிவந்துக் கொண்டிருக்கின்றது. எனவே, இப்படிப்பட்ட நிலையில் நாடு இன்றைக்கு சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான், ப.சிதம்பரத்தின் கைது – காஷ்மீர் பிரச்சினை இதுபோன்ற முறைகளை இன்றைக்கு கையாண்டு கொண்டிருக்கின்றார்கள். அது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் முதல்வர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். அதனை மக்கள் ரசிப்பார்கள் – வாழ்த்துவார்கள். முதல்வர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கின்றார் முதலீடு ஏதாவது கொண்டுவருவார் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

ஆனால், தற்போது ஒரு கேபினெட்டே வெளிநாடு சென்றுள்ளது. ஒரு சுற்றுலா அமைச்சரவையாக அதிமுக அமைச்சரவை மாறியிருக்கின்றது. இன்னும் ஏழெட்டு அமைச்சர்கள் போகப்போகின்றார்கள் என்ற செய்தி வந்திருக்கின்றது. அவர்கள் செல்லட்டும் நான் அதை தவறென்று சொல்லவில்லை, தவறென்று கூட நான் வாதிடவில்லை.

ஏற்கெனவே, இதே தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றோம் என்ற ஒரு செய்தியினை வெளியிட்டார்கள். அதற்கடுத்து அவர் மறைந்ததற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில், ஏறக்குறைய 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளோம் என்ற செய்தியினை வெளியிட்டார்கள்.

எனவே, இரண்டுக்குமான கணக்கீடும் 5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு வந்திருக்கின்றது. இதில் எவ்வளவு முதலீட்டை தமிழக அரசு பெற்றது? அதில் எவ்வளவு முதலீட்டாளர்கள் இன்றைக்கு தொழில் தொடங்க முன்வந்துள்ளனர்? அதில், எத்தனை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று, ஏதோ தெருவில் அல்ல, சட்டப்பேரவையில் நான் பேசினேன்.

ஆனால், இன்று வரையில் வெளியிடப்படிருக்கின்றதா? என்றால் இல்லை. எனவே, இந்த நிலையில் இப்போது நீங்கள் வெளிநாட்டுக்கு போயிருக்கின்றீர்கள். ஏற்கெனவே இருந்த நிலையென்ன? முதல் உலக முதலீட்டார் மாநாட்டில் அவர்கள் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்வளவு? ஏறக்குறைய 98. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்? 304.

ஏறக்குறைய 16 தொழிற்சாலைகள் வரப்போகின்றது என்ற ஒரு செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. இவையெல்லாம் ஒரு அறிவிப்பாக இருந்துகொண்டிருக்கின்றதே தவிர இவை எல்லாம் விரைவில் செயல்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றதா?

எனவே, இதிலிருந்து இந்த தமிழகத்தை அதையும் தாண்டி இந்தியாவை காப்பாற்ற வேண்டிய ஒரு கட்டாயம் - சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது"

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x