Published : 04 Sep 2019 02:50 PM
Last Updated : 04 Sep 2019 02:50 PM

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயம்  இணையும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் நிச்சயமாக இந்தத் திட்டத்தில் இணைவோம்.

இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளத்தான் உணவுத்துறை அமைச்சர் டெல்லி சென்றிருக்கிறார். இந்தியாவிலேயே விலையில்லாமல் அரிசி கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் வேறு மாநிலத்துக்காரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டுமெனில், அந்த மாநிலத்து விதிமுறையின் படிதான் வாங்க முடியும்.

புதிதாக, வேறு மாநிலங்களில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்குபவரின் ரேஷன் அட்டைகள், ஆன்லைனில் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். அவை அனைத்தும் மத்தியத் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு, அதற்கான அரிசியைப் பெற்றுக் கொடுப்போம்.

இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களுக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது. சிறப்பு விநியோகத் திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகியவை குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்நிலையில் நமது மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் மக்கள், பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். அதேபோல மற்ற மாநிலத்தவர், இங்கு எதையும் இலவசமாக வாங்கிவிட முடியாது'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் பொது விநியோகம் பாதிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ இத்திட்டத்தில் இணைவது நிச்சயம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x