சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மக்கள் நலன் கருதி திரும்பப் பெறுக; இரா.முத்தரசன்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

மக்கள் நலன் கருதி சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கைவிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. நல்லூர்பாளையம், வைகுந்தம், எளியார்பட்டி, கொடைரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர் பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இந்தக் கட்டணம் வேறுபடும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் எந்தவிதமான அறிவிப்புமின்றி திடீரென கட்டணங்களை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இத்தகைய அறிவிப்பினால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இனி ரூ.15 கூடுதலாகச் செலுத்த வேண்டும். ஏற்கெனவே சுங்கச்சாவடிகளின் கட்டணக் கொள்ளையால் சொந்தமாக வாகனம் வைத்துள்ளோர் மற்றும் வாடகை வண்டிகளில் பயணிப்போர், சரக்குகளைக் கையாளும் வணிகர்கள் என அனைவரும் பெரும் பாதிப்பில் உள்ளனர்.

சுங்கச்சாவடிகளில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற அவர்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ள சூழலில் தற்போது கூடுதல் கட்டணம் என்பது கண்டனத்திற்குரியது. அதை உடனடியாக ரத்து செய்வது தான் நியாயமானது. மக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டண உயர்வைக் கைவிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in