

புதுச்சேரி
காலியாக உள்ள புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவியில் போட்டியிட ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நேரமான பகல் 12 வரை வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றித் தேர்வாகிறார். நாளை பதவியேற்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக உள்ள சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை (5-09-19) நடைபெறவுள்ளதாகவும், போட்டியிட விரும்புவோர் இன்று பகல் 12 மணிக்குள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வேண்டுமென சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (செப்.4) சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரிடம் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் பாலன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் உள்ளதால் எதிர்க்கட்சி சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இறுதி நேரம் பகல் 12 மணிவரை வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் எம்.என்.ஆர் பாலன் போட்டியின்றித் தேர்வாகிறார். அவர் நாளை பதவியேற்க உள்ளார். யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாத சூழலில், பாலன் சட்டப்பேரவைக்குள் இருந்த எம்எல்ஏக்கள் அனைவரிடமும் கைகுலுக்கி தனது மகிழ்வை வெளிப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து துணை சபாநாயகராக பதவியேற்க உள்ள பாலனிடம் கேட்டதற்கு, "துணை சபாநாயகர் பதவியில் சிறப்பாகச் செயல்படுவேன்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
செ.ஞானபிரகாஷ்