

தாயு.செந்தில்குமார்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் கிராமத்தில் பனங்கிழங்கு அல்வா தயாரித்து அசத்தும் தமிழாசிரியர், பனங்கிழங்கிலிருந்து 25 வகையான உணவுப் பொருட்கள் தயாரித்து சாதனை செய்ய திட்டமிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் ஆயக்காரன் புலத்தை சேர்ந்தவர் சித்தர்வேல் மகன் கார்த்திகேயன்(32) . தனியார் பள்ளியில் தமிழாசிரியராக உள் ளார். இவர் பனங்கிழங்கை மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட் களை செய்து அசத்தி வருகிறார். வேதாரண்யம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகளில் கார்த்திகேயனின் பனங்கிழங்கு அல்வா ஸ்பெஷல் ஸ்வீட்டாக பரிமாறப்படுகிறது.
இதுகுறித்து கார்த்திகேயன் கூறியது: கடந்த ஆண்டு கஜா புயல் தாக்கத்தில் நாகப்பட்டினம் மட்டு மின்றி தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான மரங்கள் அழிந்தன. ஆனால், ஒரு பனை மரம் கூட சாயவில்லை. பனை மரத்தின் சல்லி வேர்கள் அத்தனை வலிமையானவை. பனை மரத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் என் குறிக் கோளாகும்.
பனங்கிழங்கு பசியை தூண்ட வல்லது. இது சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகும். மேலும், மலச்சிக்கலை நீக்குவதோடு, உடலில் உள்ள கழிவுகளையும் பிரித்து வெளியேற்றுகிறது. பனங்கிழங்கில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம். பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவையுடன் வெல்லம் இணையும்போது இரும்புச்சத்து கூடுதலாக கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டம் அளிக்கிறது. உடல் எடையை குறைத்து, உடலை வலுப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு பனங்கிழங் கிலிருந்து பர்பி செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு அல்வா செய்திருக்கிறேன். மேலும், பனங்கிழங்கில் இருந்து அதிரசம், இனிப்பு முறுக்கு, கார முறுக்கு, பனியாரம், கேசரி, தோசை என 25 வகையான உணவு பொருட்களை செய்து சாதனை படைப்பதுதான் என்னுடைய லட்சியம் என்றார்.
தயாரிப்பு முறை
பனங்கிழங்கு தயாரிப்பு முறை குறித்து ஆசிரியர் கார்த்திகேயன் கூறும்போது, ‘‘பனங்கிழங்கை நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் அதை நன்கு உலர வைக்க வேண்டும். உலர்ந்தபின் அதை மாவாக்கி, அதனுடன் முந்திரி, ஏலக்காய், நெய் சேர்த்து வெல்லப் பாகு கலந்தால் சுவையான பனங் கிழங்கு அல்வா தயார்’’ என்றார்.