Published : 03 Sep 2019 07:48 PM
Last Updated : 03 Sep 2019 07:48 PM

உயிர் காத்த உதவி ஆய்வாளர்; இ.மெயிலில் தகவல் தெரிவித்த பெண்: நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டு

ரெயிலில் தவறிவிழ இருந்த தன்னை காப்பாற்றிவிட்டு பணிக்குச் சென்றுவிட்ட உதவி ஆய்வாளர் பற்றி இமெயிலில் காவல் ஆணையருக்கு தனது நன்றியை தெரிவித்தார் காப்பாற்றப்பட்டப் பெண். உதவி ஆய்வாளரை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையர்.

ரயிலிலிருந்து தவறி விழவிருந்த பெண்மணியை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல் நிலைக்காவலர் ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை, மடிப்பாக்கம், மூவரசன்பேட்டை, ராகவா நகரைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (45), இவரது மனைவி சுமதி (43) இவர் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று மாலை 5.00 மணியளவில் புனித தோமையர் மலை ரயில் நிலைய நடைமேடை 1-ல் கடற்கரையை நோக்கி வந்த மின்சார ரயிலில் ஏற முயன்ற போது, ரயில் புறப்பட்டதினால் நிலைதடுமாறிய சுமதி ரயில் பெட்டியின் கம்பியை பிடித்துக்கொண்டு உயிர்பிழைக்க தொங்கிக்கொண்டே சிறிது தூரம் சென்றுள்ளார்.

மேற்படி பெண்மணி ரயிலிலில் கம்பியை பிடித்துக்கொண்டு உயிருக்குப் போராடுவதை பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த விமானநிலைய காவல் உதவி ஆய்வாளர் அலெக்ஸாண்டர் கவனித்து விரைந்து செயல்பட்டு ரயிலை பின்தொடர்ந்து பிளாட்பாரத்தில் ஒடி தவறி விழும் நிலையிலிருந்த பெண்மணியை கைத்தாங்கலாக தூக்கி காப்பாற்றியுள்ளார். அவருக்கு அப்பெண்மணி நன்றி தெரிவித்துள்ளார்.

ஜாக்கிரதையாக பயணம் செய்யுங்கள், இந்த ரெயில் இல்லாவிட்டால் இன்னொரு ரெயில் உயிர் போனால் வராது, உங்களை நம்பி குடும்பம் பிள்ளைகள் இருப்பார்கள். கவனமாக இருங்கள் என்று தெரிவித்துவிட்டு அலெக்சாண்டர் பணிக்கு சென்று விட்டார்.

தக்க சமயத்தில் உயிரைக்காத்து, எவ்வித காயமும் ஏற்படாவண்ணம் மீட்ட உதவி ஆய்வாளர் வி.அலெக்ஸாண்டரை பாராட்டி சுமதி கோகுலகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு இ-மெயிலில் விபரத்தைச் சொல்லி நன்றிக் கடிதம் அனுப்பினார்.

கடிதத்தை பார்வையிட்ட காவல் ஆணையர், தக்க சமயத்தில் உதவி செய்து சென்னை பெருநகர காவல் துறைக்கு நற்பெயர் வாங்கி கொடுத்த உதவி ஆய்வாளர் வி.அலெக்ஸாண்டர் மற்றும் இ-மெயிலில் கடிதம் அனுப்பிய சுமதி கோகுலகிருஷ்ணன் ஆகியோரை இன்று நேரில் வரவழைத்தார்.

சுமதி கோகுலகிருஷ்ணன் தனது கணவருடன் சேர்ந்து வந்து சென்னை காவல் ஆணையரிடம், உதவி ஆய்வாளர் அலெக்ஸாண்டரின் பணியை வெகுவாக பாராட்டி சென்னை காவல் துறைக்கு நன்றி தெரிவித்தார். காவல் ஆணையர் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தார்.

உதவி ஆய்வாளருக்கு அப்பெண் நன்றியைத்தெரிவித்தார், உதவி ஆய்வாளரின் துணிச்சலான பணியை பாராட்டி காவல் ஆணையர் அவருக்கு வெகுமதி வழங்கினார்.

இதேப்போன்று வளசரவாக்கம் பகுதியில் ரோந்து வாகன உதவி ஆய்வாளரை தள்ளிவிட்டு தப்பியோடிய பழைய குற்றவாளியை முதல் நிலைக்காவலர் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

வளசரவாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் ஏ.குணசேகர் இன்று (03.09.2019) அதிகாலை 04.30 மணியளவில் வளசரவாக்கம், ஆற்காடு ரோடு, பாலாஜி கெஸ்ட் ஹவுஸ் அருகில் செக்டார் ரோந்து பணியிலிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பழைய குற்றவாளி தங்கவேல் (58), என்பவரை பிடித்தார்.

அவரை ரோந்து வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் கொண்டுவரும்போது, வழியில் குற்றவாளி தங்கவேல் ரோந்து வாகன பொறுப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் முரளிதரனை கீழே தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார்.
உதவி ஆய்வாளர் முரளிதரன் குற்றவாளியை பிடிக்க முற்பட்டபோது, நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனே அருகிலிருந்த முதல் நிலைக்காவலர் ஏ.குணசேகர் துரிதமாக செயல்பட்டு தப்பியோடிய குற்றவாளியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.குற்றவாளியை பிடிக்க முயன்றதில் காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முரளிதரன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட குற்றவாளி தங்கவேல் மீது திருட்டு மற்றும் பீரோபுல்லிங் வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ரயிலிலிருந்து தவறிவிழவிருந்த பெண்மணியை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய விமானநிலைய காவல் உதவி ஆய்வாளர் வி.அலெக்ஸாண்டர் மற்றும் தப்பியோடிய பழைய குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த வளசரவாக்கம் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் ஏ.குணசேகர் ஆகிய இருவரையும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், இன்று (03.9.2019) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x