அடுத்த 24 மணி நேரத்தில் கோவை நீலகிரியில் கனமழை: சென்னையில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துவிட்டதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழையும், சென்னை உள்ளிட்ட கேடிசி பகுதிகளில் நல்ல மழையும் பெய்துவருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை தகவல் வருமாறு.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தகவல் வருமாறு:
“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 8 சென்டி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மாலையோ அல்லது இரவோ ஒரு சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
சென்னை வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்ஷியசும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்ஷியசும் இருக்கக்கூடும்”. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
