

சென்னை
சென்னை, அண்ணா நகர் பகுதியில் உள்ள சாலையில் திடீரென 15 அடிக்கு பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அண்ணா நகர் சாந்தி காலனி, 4-வது அவென்யூ பகுதியில் இன்று காலை சுமார் 15 அடிக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளத்தைச் சுற்றி தடுப்பு வளையங்களை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர். இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. நடைபாதையைப் பயன்படுத்தும் மக்கள் அனைவரும் அருகிலுள்ள சாலையைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த திடீர் பள்ளத்தால், அண்ணா நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது.
மெட்ரோ ரயில் காரணமா?
பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு அருகாமையில்தான் அண்மையில் மெட்ரோ ரயில் தடத்துக்கான பணி நடைபெற்றுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் தொடர்பாக வேலைகளால்தான் பள்ளம் ஏற்பட்டதா என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் ஒன்றை வரவழைத்து, அதன் மூலம் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்தப் பள்ளம் உருவானதற்கான காரணம் தெரியவில்லை. சென்னையில் மத்திய கைலாஷ், அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.