Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

ராமநாதபுரத்தில் திமுக போட்டியிடுவதில் சிக்கல்: கூட்டணிக்கு ஒதுக்க ஆலோசனை

ராமநாதபுரம் திமுக-வில் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி.க்கும் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனுக்கும் இடையில் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்களை சமாளிப்பதற்காக இந்த முறை ராமநாதபுரம் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட திமுக தலைமை ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ராமநாதபுரத்தை தன் வசம் வைத்திருக்கிறது திமுக. கடந்த தேர்தலில் ராஜாத்தி அம்மாள் சிபாரிசில் ஜே.கே.ரித்தீஷ் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டு எம்.பி. ஆனார். அதன்பிறகு, அவருக்கும் மாவட்டச் செயலாளர் சுப.தங்கவேலனுக்கும் இடையில் உரசல் ஆரம்பித்து தற்போது உச்சத்தில் நிற்கிறது.

கட்சியின் விசுவாசிகள் உட்கட்சித் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டதாகச் சொல்லி போர்க்கொடி தூக்கி இருக்கும் ரித்தீஷ், நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியில் விருப்ப மனு கொடுக்கவில்லை. அதேசமயம், சுப.தங்கவேலனின் மகனும் மாநில இளைஞரணி துணை அமைப்பாளருமான சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் தங்களுக்கு வாய்ப்புக் கேட்டு விருப்ப மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய திமுக முக்கிய பொறுப்பாளர் ஒருவர், “ராமநாதபுரம் திமுக இப்போது இருக்கும் நிலையில் யாருக்கும் சீட் கொடுத்தாலும் கோஷ்டி அரசியல் நடத்தி கட்சியை வீழ்த்தி விடுவார்கள். இது தெரிந்துதான் தலைமையும் இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க ஆலோசனை நடத்தி இருக்கிறது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடந்த முறை திமுக கூட்டணி யில் வேலூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றது.

இந்தமுறை வேலூரில் துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தை நிறுத்த பிரயாசைப்படுகிறார். அவருக்காக 150 பேருக்கும் மேல் விருப்ப மனுவும் கொடுத்திருக்கிறார்கள். வேலூரில் கதிர் ஆன்ந்த் நிறுத்தப்பட்டால் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்படும். இதுகுறித்து தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே, கூட்டணியில் மாற்றம் இல்லாதவரை இதில் எந்த மாற்றமும் இருக்காது’’ என்று சொன்னார். இந்த முறை தேர்தலில் போட்டியிட விரும்பாதது குறித்து ரித்தீஷ் எம்.பி.யிடம் கேட்டதற்கு, “நான் பதவிக்காக அலைபவன் அல்ல. நமக்கு சீட் கொடுத்து அங்கீகரித்த கட்சியை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என நினைப்பவன்.

ராமநாதபுரம் மாவட்ட உட்கட்சித் தேர்தலில் பல இடங்களில் தகுதியான நபர்களுக்கு வாய்ப்பளிக்காமல் கட்சியை கெடுத்து வைத்திருக்கிறார்கள். இவங்கள நம்பி எப்படி தேர்தலில் நிற்பது? எனவே மாவட்டத்தில் தகுதியான நபர்களை கட்சிப் பதவிகளில் அமர்த்தும் வரை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். அதனால் நான் விருப்ப மனு கொடுக்க வில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x