

சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்துவிட்டு, அதற்கான காரணத்தை சிபிஐ தேடுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான வகையில் ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது உதவினார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்
இதையடுத்து, கடந்த 21-ம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. முதலில் 5 நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், 26-ம் தேதி சிதம்பரத்துக்கான சிபிஐ காவலை செப்டம்பர் 2-ம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சிபிஐ, அமலாக்கப் பிரிவு தொடர்ந்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் நேற்று (செப்.2) உத்தரவிட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்றிரவு (செப்.2) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "புத்திசாலித்தனமே இல்லாமல் ஒருவரைக் கைது செய்துவிட்டு, காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரைக் கைது செய்துவிட்டு, அதற்கான காரணத்தைத் தேடுவது இதுவே முதன்முறை. இந்த நிமிடம் வரை சிபிஐயால், எந்த குற்றச்சாட்டையும் ப.சிதம்பரத்திற்கு எதிராக வைக்க முடியவில்லை. காரணம், எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை. 'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்'. கற்பனையான குற்றச்சாட்டின் அடிப்படையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்", என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.