வங்கிகள் இணைப்பு: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு

வங்கிகள் இணைப்பு: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

மதுரை

மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார சுணக்கத்தைப் போக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சில தினங்களுக்கு முன்பு பொருளாதார ஊக்கத்திற்காக சில அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாகச் செயல்படும் என்ற அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுகுறித்து வெவ்வேறு விதமான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், ''நாட்டின் பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில், வங்கிகள் இணைப்பை நடைமுறைப்படுத்தி இருக்கக் கூடாது. கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் வங்கிகள் இணைப்பு அத்தனை எளிதான காரியம் அல்ல. எல்லா வங்கிகளுக்கும் கிளைகள் இருக்கின்றன. ஒரே சாலையில் பேங்க் ஆஃப் பரோடாவும் இருக்கும். விஜயா வங்கியும் இருக்கும். வங்கிகளை மூடும்போது இதையெல்லாம் யோசிக்க வேண்டும். குறிப்பாக பொருளாதாரச் சூழல் சரியில்லாதபோது இதைச் செய்திருக்கக் கூடாது.

அவ்வாறு செயல்படுத்தினால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். அருண் ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தபோது சிறப்பாகச் செயல்படாததன் விளைவை நாடு தற்போது மொத்தமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதனால் அவர் 20 வருடம் சிறை செல்வது உறுதி'' என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in