Published : 03 Sep 2019 10:20 AM
Last Updated : 03 Sep 2019 10:20 AM

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

சென்னை

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்படும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் 2008-ம் ஆண்டைச் சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

நல்லூர்பாளையம், வைகுந்தம், எளியார்பட்டி, கொடைரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர் பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கும் இந்தக் கட்டணம் வேறுபடும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி ரூ.5 முதல் ரூ.15 வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கார்/ஜீப்/பயணிகள் வேன்களுக்கு ஒருவழிப் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.80 வசூலிக்கப்படுகிறது. பலமுறை பயணக் கட்டணம் 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான பலமுறை பயண சுங்கக் கட்டணம் 215 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்கள், பேருந்துகளுக்கான கட்டணம், ஒருவழிப் பயணம் ரூ.285, பலமுறைப் பயணம் ரூ.430 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கான ஒருவழிப் பயணத்துக்கு 460 ரூபாயும், பலமுறை பயணத்துக்கு 690 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x