Published : 02 Sep 2019 11:20 AM
Last Updated : 02 Sep 2019 11:20 AM

நீர்நிலை தூர்வாரல்: நிதியை மொத்தமாக எடுத்துக்கொள்ளும் ஆளுங்கட்சி- முத்தரசன் விமர்சனம்

திருவாரூர்

நீர்நிலைகளைத் தூர் வாருவதற்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதியை ஆளுங்கட்சியினரே எடுத்துக்கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காவிரிப் பாசனப் பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒரு சில தினங்களில் மேட்டூர் அணை, அதன் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. எனினும் ஒரு போக சம்பா சாகுபடியைக் கூட மேற்கொள்ள முடியாமல், டெல்டா விவசாயிகள் கடனில் சிக்கித் தவிக்கின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக ஆறு, குளம், வாய்க்கால்களைத் தூர் வாராமல், தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் அவசர அவசரமாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறை மூலமாக, நீர்நிலைகளைத் தூர் வாருவதற்காக கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுகிறது.

இது எழுதப்படாத சட்டமாக ஆளுங்கட்சியினரே அப்படியே மொத்தமாக எடுத்துக்கொள்வதற்காக நிதி பயன்படுத்தப்படுகிறது. இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் காவிரி நீர், இன்னும் கடைமடைப் பகுதியை வந்து சேரவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x