

சென்னை
ஆவின் பாலை தொடர்ந்து, தனி யார் பால் விலையும் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில், 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகத் துக்கான பால் தேவையில் ஆவின் நிறுவனம் 16.6 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. மீதமுள்ள, 83.4 சதவீதம் தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்து வருகின்றன. குறிப்பாக, தேநீர் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தனியார் பாலையே பயன்படுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும், ஆவின் பால் விலை உயர்வு குறைக்கப்படவில்லை.
இந்தநிலையில், ஹெரிடேஜ், திருமலா, டோட்லர், ஜெர்சி, சங்கம், கோவர்த்தனா, ஜேப்பியார் உள் ளிட்ட தனியார் பால் நிறுவனங் களும் பால் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தியுள்ளது.
இதில், திருமலா, ஜேப்பியார் உள்ளிட்ட பால் நிறுவனங்கள் நேற்றுமுதல் விலை உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதன்படி, இரு முறை சமன் படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் ரூ.38-ல் இருந்து ரூ.40 ஆக உயர்ந் துள்ளது.
சமன்படுத்தப்பட்ட பால் ரூ.40-ல் இருந்து ரூ.44 ஆகவும், நிலைப் படுத்தப்பட்ட பால் ரூ.50-ல் இருந்து ரூ.52-க்கும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.56-ல் இருந்து ரூ.58 ஆகவும் உயர்ந்துள்ளது. தயிர் 1 லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.56 ஆகவும் உயர்ந்துள்ளது.
பால் முகவர்கள் சங்கம்
இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனியார் பால் நிறுவனங்கள் இந்த ஆண்டில் 3-வது முறை யாக விலையை உயர்த்துவதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கி றோம். ஆவின் நிறுவனத்தை விட பால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலைகொடுத்தே பாலை கொள்முதல் செய்து விட்டு ஒவ்வொரு முறை பால் விற்பனை விலையை உயர்த்தும் போதெல்லாம் பால் கொள்முதல் விலை உயர்வு என்கிற காரணத்தை காட்டுவதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது.
எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலை யிட்டு தனியார் பால் நிறுவ னங்களை வரன்முறைப்படுத்த வேண்டும். பால் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.