Published : 15 Jul 2015 10:54 AM
Last Updated : 15 Jul 2015 10:54 AM

அவசர அரசு அலுவல்களால் பிரதமர் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

அவசர அரசு அலுவல்கள் காரணத்தால் இன்று (ஜூலை 15) நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை - நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்கும் முயற்சியாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இக்கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நிதிஆயோக் அமைப்பின் துணை தலைவர் டாக்டர் அர்விந்த் பனகாரியாவிடம் இருந்து டெல்லியில் இன்று (ஜூலை 15) நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக் கடிதம் கடந்த 7-ம் தேதியன்று வந்தது.

ஆனால், இங்கு வேறு சில அவசர அரசு அலுவல்கள் இருப்பதாலும், அவற்றை வேறு தேதிக்கு மாற்ற வாய்ப்பில்லாததாலும் நான் இன்று நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், எனது சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லி அனுப்பிவைப்பதாக இருந்தேன். அவருடன் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை முதன்மைச் செயலரையும் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், நிதிஆயோக் நிர்வாக குழு, கூட்டத்தில் மாநில முதல்வருக்கு பதிலாக வேறு ஒருவர் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், எனது கருத்துகளை அச்சிட்டு நிதிஆயோக் அமைப்புக்கு அனுப்பியுள்ளேன். தமிழக அரசின் கருத்துகளை, கோரிக்கைகளை மத்திய அரசு நிச்சயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என நம்புகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x