அரசு ‘சுற்றுலா மாளிகை’யில் தங்குவதைத் தவிர்க்கும் தலைவர்கள்: அமைச்சர்கள் பெயரில் அறைகளை ஆக்கிரமிக்கும் ஆளும் கட்சியினர்

அரசு ‘சுற்றுலா மாளிகை’யில் தங்குவதைத் தவிர்க்கும் தலைவர்கள்: அமைச்சர்கள் பெயரில் அறைகளை ஆக்கிரமிக்கும் ஆளும் கட்சியினர்
Updated on
2 min read

மதுரை,

அரசு சுற்றுலா மாளிகைகளில் முதல்வர் உள்ளிட்ட முதன்மைத் தலைவர்கள் தற்போது தங்குவதைத் தவிர்க்கும் நிலையில் அறைகளை அமைச்சர்கள் பெயரில் ஆளும் கட்சியினர் நிரந்தரமாகவே ஆக்கிரமித்து வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வர், ஆளுநர், எம்எல்ஏக்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், வெளியூர்களுக்கு அரசு முறைப் பயணமாகச் செல்லும்போது அவர்கள் தங்குவதற்காக ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் அரசு சுற்றுலா மாளிகைகள் (Circuit House) கட்டப்பட்டுள்ளன. இந்தச் சுற்றுலா மாளிகைகளில் ஹால், டைனிங் டேபிள் மற்றும் படுக்கை அறை வசதி கொண்ட ‘சூட்’ அறைகளும், சாதாரண அறைகளும் உள்ளன. அனைத்து அறைகளுக்கும் ‘ஏசி’வசதி உள்ளன.

மதுரையில் அழகர் கோயில் சாலையில் ஒரே வளாகத்தில் 1951 மற்றும் 2002-ம் ஆண்டில் கட்டிய இரண்டு சுற்றுலா மாளிகைகள் உள்ளன. இதில், 1951ல் கட்டிய பழைய சுற்றுலா மாளிகையில் 1999-ம் ஆண்டில் ஒரு மாடி கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தில் கீழ் தளத்தில் 3 சூட் அறைகள் உள்பட மொத்தம் 5 அறைகள் உள்ளன. மாடியில் ஒரு சூட் அறை உள்பட 5 அறைகள் உள்ளன. 2006-ம் ஆண்டில் கட்டிய அரசு சுற்றுலா மாளிகையில் 3 சூட் அறைகள் உள்பட 7 அறைகள் உள்ளன. ‘சூட்’அறைகள் ஒதுக்கீடு செய்வதில் அமைச்சர்களுக்கு முதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதன்பிறகு அறைகள் இருப்பதைப் பொறுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும், எம்எல்ஏக்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. சூட் அறைகளுக்கு ஒரு நாள் வாடகை ரூ.175, மற்ற அறைகளுக்கு ரூ. 75 கட்டணம் பெறப்படுகிறது.

முதல்வர், ஆளுநர் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு இரண்டு ‘சூட்’அறைகள் தயாராக வைக்கப்பட்டிருக்கும். இந்த அறைகள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாது. மற்ற அறைகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் வந்தால் தங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்படும். கடந்த காலத்தில் முதல்வர்கள், அமைச்சர்கள், அரசுக்குச் சொந்தமான இந்த சுற்றுலா மாளிகைகளில்தான் தங்குவார்கள்.

எம்ஜிஆர், கருணாநிதி காலத்திற்குப் பிறகு முதன்மைத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் பெரும்பாலும் சுற்றுலா மாளிகையில் தங்குவதில்லை. கருணாநிதியும், ஜெயலலிதாவும் கூட கடைசி காலத்தில் ஒவ்வொரு நகரங்களுக்கும் செல்லும்போது சொகுசு ஹோட்டல்களிலே தங்கினர். தற்போது முதல்வர் கே.பழனிசாமி கூட அரசு சுற்றுலா மாளிகையில் தங்குவதில்லை.

மதுரை மட்டுமில்லாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலா மாளிகைகளில் அமைச்சர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் இங்கு தங்குவதில்லை. ஆனால், ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெயரில் அந்தந்த ஊர் கட்சி நிர்வாகிகள், சுற்றுலா மாளிகைகளில் அறைகள் எடுத்து ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அதனால், அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கு, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு தங்க அறைகள் கிடைப்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. அதனால், எந்த நோக்கத்திற்காக இந்த அரசு சுற்றுலா மாளிகைகள் கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவடையாமல் உள்ளது.

சுற்றுலா மாளிகையைப் பராமரிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முதல்வர், ஆளுநருக்கு மட்டுமே எப்போதும் ஒரு சூட் தயாராக இருக்கும். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிக அளவு வந்து தங்குவதால் அறைகள் போதுமானதாக இல்லை. அதனால், மதுரையில் கூடுதலாக மற்றொரு சுற்றுலா மாளிகை கட்டுவதற்கு ரூ.5 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளோம். கட்டிய பிறகு ஓரளவு அறை தட்டுப்பாடு வராது, ’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in