

புதுச்சேரி,
சட்டரீதியாகவே நடந்ததால் நடிகை அமலாபால் வாகனப் பதிவில் தவறு நடக்கவில்லை என சுட்டிக்காட்டி கேரள போலீஸ் தரப்பிலிருந்து வந்துள்ள கடிதத்துக்கு புதுச்சேரி அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சட்டத்துறையிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரி தெரிவித்தார்.
புதுச்சேரியில் நடிகை அமலாபால் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் உயர்ரக பென்ஸ் எஸ் கிளாஸ் காரை வாங்கினார். இதன் விலை ரூ.1.5 கோடி. இந்தக் காரை அவரது சொந்த மாநிலமான கேரளத்தில் வாங்கியிருந்தால் அரசுக்கு ரூ. 23 லட்சம் வரை வரி கட்டியிருக்க வேண்டும். புதுச்சேரியில் ஒரு சதவீதம் மட்டும்தான் வரி என்பதால் ரூ. 1.5 லட்சம் வரை வரி கட்டி விட்டு காரை எடுத்துச் சென்று நீண்ட நாட்களாக கேரளத்தில் பயன்படுத்தி வந்துள்ளார். அதேபோல் நடிகர்கள் பகத் பாசில், சுரேஷ்கோபி ஆகியோர் உட்பட பலர் பேர் மீது கேரளத்திலிருந்து வரி ஏய்ப்பு தொடர்பாக பிரச்சினை எழுந்தது.
இதைத் தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீஸார் புதுச்சேரியில் விசாரணை நடத்தினர். அப்போது திரைத்துறையைச் சேர்ந்த மூவரும் போலியான முகவரி தந்து வாகனப்பதிவு செய்வது உறுதியானது.
இச்சூழலில் தற்போது கேரள குற்றப்பிரிவு போலீஸார் கொச்சி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், "புதுச்சேரியில் நடிகை அமலாபால் போலி ஆவணம் தந்து வாகனம் பதிவு செய்திருப்பதால் அந்த மாநிலத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். அமலாபால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி போக்குவரத்துத் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
இதில் நடிகர் பகத் பாசில் கூடுதல் வரி செலுத்தியதால் இவ்வழக்கில் இருந்து கேரள போலீஸார் விடுவித்துள்ளனர். ஆனால் சுரேஷ் கோபி மீதான வழக்கு தொடர்கிறது.
இக்கடித விஷயம் தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் சிவகுமாரிடம் கேட்டதற்கு, "கேரள அரசு தரப்பிலிருந்து நடிகை அமலாபால் கார் விவகாரம் தொடர்பாக கடிதம் புதுச்சேரி அரசுக்கு வந்துள்ளது. மாநில சட்டத்துறையிடம் ஆலோசனை கோரியுள்ளோம். அதன் அடிப்படையில் செயல்படுவோம்" என்று குறிப்பிட்டார்.
துறைரீதியான ஊழல் -தவறு நடக்கவில்லை: புதுச்சேரி போக்குவரத்துத் துறை விளக்கம்
இவ்விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தரப்பில் விசாரித்தபோது, "நடிகை அமலாபால் கர்நாடகத்தில் பென்ஸ் கார் வாங்கினார். சட்டரீதியாக தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரிக்கு எடுத்து வந்து 8.8.2017ல் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.
போக்குவரத்துத் துறை சட்டவிதிகள் படி ஒருவர் ஒரு வாகனத்தைப் பதிவு செய்ய ஆதாரங்கள் தர வேண்டும். அதாவது, வாக்காளர் அட்டை, எல்ஐசி பாலிசி, பாஸ்போர்ட், பள்ளிச் சான்று, பிறப்புச் சான்று, அஃபிடவிட் ஆகியவை தாக்கல் செய்யலாம். இது இருப்பிடத்தை உறுதி செய்யும். அமலாபால், தனது கையெழுத்துடன் கூடிய அஃபிடவிட்டை தாக்கல் செய்தார். திலாசுபேட்டையில் வாடகை வீட்டில் இருப்பதற்கான இருப்பிடச் சான்று தாக்கல் செய்தார். அத்துடன் எல்ஐசி பாலிசியும் இம்முகவரியில் இருந்து தந்தார்.
துறை ரீதியாக ஊழல் தவறு நடக்கவில்லை. சட்டரீதியாக நடந்துள்ளது. ஆவணங்களைத் தாக்கல் செய்தவுடன் அதை சரிபார்த்து பதிவு செய்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம். புதுச்சேரியில் வரி குறைவு. 1 சதவீதம்தான் வசூலிக்கப்படுகிறது. வரியை நிர்ணயிக்க அரசுக்கு சுதந்திரம் உண்டு. இதைக் குறிப்பிட்டு கேரள போலீஸ் கடிதத்துக்கு அரசு பதில் அனுப்ப வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
இவ்விஷயத்தில் அப்போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட்டிருந்தார். அப்போது அவர், வாகன பதிவு விஷயத்தில் நாட்டுக்கே வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் தணிக்கைத்துறை விசேஷமான ஆய்வை மேற்கொள்ளும்படி கூறியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் அவர் கூறிய இவ்விஷயத்தில் ஏதும் நடைபெறவில்லை என்றும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமலாபால் எங்குள்ளார்?
கார் பதிவு செய்யும் பணியில் ஈடுபடும் இடைத்தரகர்கள் தரப்பில் விசாரித்தபோது, "உயர் ரக கார்கள், ஆம்னி பஸ்கள் என பதிவு செய்யும் பணியைச் செய்து தர தனியாக இடைத்தரகர்கள் உள்ளோம். கார் பதிவாகும் விஐபி உரிமையாளர் புதுச்சேரியில் தங்கியிருக்க அவரது பெயரில் வாடகை வீடு பதிவாகும். அதையடுத்து பிரமாணப் பத்திரம் தயாரிக்கப்படும். பின்னர் வாகனம் பதிவாக 'பார்ம் 4' விவரங்கள் பூர்த்தி செய்யப்படும். மேலும் கூடுதல் ஆவணமாக சம்பந்தப்பட்டோர் பெயரில் புதுச்சேரி முகவரியுடன் கூடிய இன்சூரன்ஸ் ஒன்று புதிதாக எடுக்கப்படும். இம்முறை பல ஆண்டுகளாக நடக்கிறது. இதனால் புதுச்சேரி அரசுக்கு வருவாய்தான் கிடைக்கிறது. சிலர் சட்டத்தை மீறி ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து தருவதும் நடக்கிறது. அதே நேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் வாகனங்கள் பதிவு செய்வது உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது.
அமலாபால் விஷயத்தைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் வாகனம் வாங்கி தற்காலிக பதிவெண் பெற்று புதுச்சேரியில் நிரந்தரப் பதிவெண் பெற்றார். இங்கிருந்து வேறொரு மாநிலத்துக்குச் சென்றால் அந்த மாநிலத்தில் பதிவெண்ணை ஓராண்டுக்குள் பதிவு செய்ய வேண்டும். ஓராண்டுக்குள் பதிவெண் பெறாவிட்டால் அந்த மாநிலம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்போது நடிகை அமலாபால் புதுச்சேரியில் குடியேறிவிட்டார்" என்று குறிப்பிடுகின்றனர்.
- செ. ஞானபிரகாஷ்