Last Updated : 01 Sep, 2019 04:34 PM

 

Published : 01 Sep 2019 04:34 PM
Last Updated : 01 Sep 2019 04:34 PM

காங்கிரஸ் குடும்பம் - தமிழக பாஜக தலைவர்- ஆளுநர்: தமிழிசை கடந்து வந்த பாதை 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

காங்கிரஸ் குடும்பம்!

நாட்டிலேயே பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒரே பெண் தமிழிசைதான். நாகர்கோவிலில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில், குமரி அனந்தனின் ஐந்து குழந்தைகளில் தலைமகளாக, 1963 ஜூன் 2-ல் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் மதுரை, பள்ளிப் பருவத்தில் சென்னை, கல்லூரிப் பருவத்தில் தஞ்சை என்று இடம்பெயர்ந்துகொண்டே இருந்தார். அந்த அனுபவம் அவரது அரசியல் பயணங்களுக்கு உதவுகிறது!

தன்மானம் மிக்க தாத்தா!

தமிழிசையின் தாத்தாக்களும் கூட காங்கிரஸ்காரர்கள்தான். தாத்தா ஹரிகிருஷ்ணன் வில்லிசைக் கலைஞர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என்பதால், துண்டை இடுப்பில் கட்டிக்கொள்ளச் சொல்வார்களாம். ‘நான் அய்யாவழி’ என்று சொல்லி, தலையில் துண்டு கட்டிக்கொண்டு வில்லிசைத்தவர் அவர். தாய்வழித் தாத்தா சங்கு கணேசன், கிறிஸ்தவத்திலிருந்து மீண்டும் தாய்மதத்துக்குத் திரும்பியவர்.

இளமையில் தமிழ்!

சிறுவயதிலேயே நாளிதழ்களை வாசிப்பது, வீட்டு நூலகத்திலிருந்து அப்பா சொல்லும் புத்தகத்தை எடுத்துக்கொடுப்பது, பள்ளிக்கூட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பது என்றிருந்திருக்கிறார் தமிழிசை. 1980-ல் எம்எல்ஏவான குமரி அனந்தன், அரசினர் தோட்டத்தில் குடியேறியதால் கருணாநிதி, எம்ஜிஆர், மபொசி போன்ற அரசியல் ஆளுமைகளைப் பார்க்கவும், அவர்களின் பேச்சைக் கேட்கவும் வாய்ப்பாக அமைந்தது.

மருத்துவக் குடும்பம்!

எம்ஜிஆர் சிபாரிசால் தமிழிசைக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. முதலாமாண்டு படித்தபோதே சவுந்தரராஜனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணவிழாவில் எம்ஜிஆர், கருணாநிதி, பக்தவத்சலம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். கணவர், மகன் சுகநாதன், மகள் பூவினி, மருமகள் திவ்யா என்று குடும்பமே மருத்துவக் குடும்பம்தான்!

தாய் தந்த பலம்!

தாய் கிருஷ்ணகுமாரியின் அரவணைப்பு தமிழிசைக்குப் பெரும் பலம். “பெரியவளானதும் என்னவாகப் போகிறாய்?” என்று ஆசிரியை கேட்டபோது, ‘எம்எல்ஏ’ என்று சொன்ன மகளைக் கடிந்துகொண்டவர் கிருஷ்ணகுமாரி. மருத்துவர்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தியவர். அரசியலுக்குள் தமிழிசை நுழைந்தபோது வாழ்த்தி மகிழ்ந்தவரும் அவர்தான். தமிழிசையின் குழந்தைகளை வளர்த்தெடுத்ததும் அவர்தான். அவர்கள் அம்மா என்றழைப்பது பாட்டி கிருஷ்ணகுமாரியைத்தான்.

அரசியல் அதிகாரத்தின் பலம்!

சவுந்தரராஜன் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது கணவருக்காகத் தமிழிசையும் இடம்பெயர்ந்தார். சாதாரண மக்களின் வாழ்க்கையை மிக அருகிலிருந்து கவனித்தது தஞ்சையில்தான். ஸ்கேன் கருவி செயல்படாதது உள்ளிட்ட பல பிரச்சினைகள் பற்றி, தான் பேசி எதுவும் நடக்காதபோது, எதிர்க்கட்சித் தலைவரான தன் தந்தை சட்ட மன்றத்தில் பேசி அவற்றை நிறைவேற்றிக்காட்டியது அரசியல் அதிகாரத்தின் பலத்தைத் தமிழிசைக்கு உணர்த்தியது.

அரசியல் ஆர்வம்!

குமரி அனந்தன் 1992-ல் 45 நாள் பாதயாத்திரை போனபோது அவருக்கும், கட்சியினருக்கும் மருத்துவ உதவி செய்வதற்காக, கைக்குழந்தையுடன் சென்றவர் தமிழிசை. ‘பெண் சக்தி’ என்ற பெயரில் தொண்டு நிறுவனமும் நடத்தினார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் அவர் உறுப்பினராகச் சேரவில்லை. ராஜ் டிவியில் குமரி அனந்தன் நடத்திவந்த ‘நீங்களும் பேச்சாளராகலாம்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் தமிழிசை. பிரதமர் வாஜ்பாய் உண்டாக்கிய ஈர்ப்பு பாஜக பக்கம் திருப்பியது.

பாஜக உறுப்பினர்!

பாஜகவில் சேர உற்சாகப்படுத்தியது கணவர்தான். தன்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்த தமிழக பாஜக துணைத் தலைவர் மருத்துவர் கிருபாநிதியைத் தமிழிசைக்கு அறிமுகப்படுத்திவைத்தார் சவுந்தரராஜன், “பாஜகவில் மாவட்டத் தலைவர் மூலம்தான் உறுப்பினர் அட்டை வாங்க முடியும்” என்று கிருபாநிதி சொல்ல, தென்சென்னை மாவட்டத் தலைவர் ‘லேலண்ட்’ சீனிவாசனைச் சந்தித்து 1999-ல் பாஜக உறுப்பினரானார் தமிழிசை!

எதிர்ப்பு, உழைப்பு, வரவேற்பு!

தமிழிசை பாஜகவில் சேர்ந்தது விமர்சனத்துக்குள்ளானது. கோபத்தில் குமரி அனந்தன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். பாஜகவிலும் யாரும் இவரை நம்பவில்லை. அலுவலகத்துக்குள் நுழைந்தால் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள்கூட சட்டென்று பேச்சை நிறுத்திவிடுவார்களாம். தன் செயல்பாட்டின் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் தமிழிசை. “டாக்டர் நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி” என்று வாழ்த்துகளையே கேட்டுப்பழகிய தமிழிசை, அந்த கிரீடத்தைக் கழற்றிவைத்துவிட்டு கட்சியில் மாவட்டத் தலைவர் போடும் உத்தரவுக்கும் தலைவணங்குகிற ஊழியராகப் பணியாற்றினார்.

ஆர்எஸ்எஸ் ஆசி!

பாஜகவின் வேர் ஆர்எஸ்எஸ்தான் என்பதை சற்று தாமதமாகத்தான் தெரிந்துகொண்டார். பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த சூரியநாராயண ராவை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வாரந்தோறும் சந்தித்து, உடல் நலம் விசாரித்தார். அதன் பிறகே தமிழிசையின் எதிர்காலம் துலக்கமானது. கட்சி உறுப்பினரான 15 ஆண்டுகளில் மாநிலத் தலைவராகிவிட்டார் தமிழிசை. தற்போது, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் சந்திப்பு!

நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டும் மக்கள் பிரதிநிதியாகவில்லை என்றாலும், காங்கிரஸுக்கு நிகரான கோஷ்டி அரசியல் நிறைந்த இயக்கத்தில், ஒரு பெண் தலைவராக தமிழிசை தன்னைத் தற்காத்துக்கொண்டதே பெரிய சாதனை. மக்கள் பிரதிநிதியாக முடியாவிட்டாலும், கமலாலயத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில், பொதுமக்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இலக்கிய ஆர்வம்!

கவிதைகள் என்றால் உயிர். பாரதியார் தொடங்கி பா.விஜய் வரையில் எல்லா கவிஞர்களின் கவிதைகளும் அத்துப்படி. சமீபத்தில், மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டு, கட்சி நிர்வாகிகளிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறார். பாஜகவில் இருந்தாலும் காமராஜர், கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ராமதாஸ் போன்ற தலைவர்களின் சிறப்பியல்புகளைப் பின்பற்றுபவர். விமர்சனங்களை சகஜமாக எடுத்துக்கொள்ளக்கூடியவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் இருப்பது தமிழிசையின் தனிச் சிறப்பு!

ஆளுநர் தமிழிசை!

தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டார். இதில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமை தமிழிசைக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x