

பாஜக, அதிமுக, திமுக ஊழலைக் கண்டித்து ஜூலை 20 -ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலசுந்தரம், யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் ஏ.ரங்கசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜக ஆளும் மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர் மாநில அரசுகளில் நடந்துள்ள ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
அதுபோல ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் வழக்கில் சிக்கிய லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் உதவியதும் வெளிவந்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கல்வித் தகுதி குறித்து பொய்யான சான்றிதழ் அளித்துள்ள செய்தியும் வந்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் ஆகியவற்றிலும் அரசுத் துறைகளிலும் முறைகேடுகள் அதிக மாகியுள்ளது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
முறைகேடுகளில் தொடர்புடைய மத்திய பாஜக அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்த நீதிமன்றம் அமைக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் தமிழகம் முழுவதும் ஜூலை 20-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.