தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை
Updated on
1 min read

சென்னை,

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவில் மருத்துவர் அணி செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளர், மாநிலத் துணைத் தலைவர், தேசியச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்து வந்தார். 2014-ம் ஆண்டில் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். வரும் டிசம்பர் மாதத்துடன் அவருடன் பதவிக்காலம் முடிவடைய இருந்தது.

இந்நிலையில் தெலங்கானா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டார். அதன்படி தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.

இது குறித்து தமிழிசை கூறுகையில், ''தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கடும் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று மோடியும், அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர். என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு பிரதமர் மோடி இப்பொறுப்பை எனக்கு அளித்துள்ளார். ஆண்டவனுக்கும் நாட்டை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் மனமார்ந்த நன்றி.

தெலங்கானாவுக்கு ஆளுநர் ஆனாலும் நான் தமிழகத்துக்கு சகோதரிதான். தமிழகத்துக்கும் என் சேவை இருக்கும். எல்லோரும் ஒரே நாடு என்ற எண்ணத்துடனே தெலங்கானாவுக்குச் செல்கிறேன். இந்த வயதில் இத்தனை உயர்வு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

44 லட்சம் பேரை கட்சியில் சேர்த்துவிட்டு இப்போது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது மகிழ்ச்சி'' என்றார்.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு கட்சிப் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in