Published : 01 Sep 2019 01:10 PM
Last Updated : 01 Sep 2019 01:10 PM

அதிமுக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக செயல்படுகின்றது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

நெல்லை,

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சரவையை, அதிமுக அமைச்சரவை என்று சொல்ல முடியாது. சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மாமன்னர் பூலித்தேவரின் 304-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டு செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஸ்டாலின் பேசும்போது, ''சிப்பாய் கலகத்துக்கு முன்பாகவே, 'வெள்ளையனே வெளியேறு' என சுதந்திரப் போராட்டத்தில் குரல் கொடுத்தவர்களில் ஒருவராக விளங்கியவர் பூலித்தேவர். அவருடைய 304-வது பிறந்த நாள் விழாவில், அவருடைய திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் என்னுடைய மரியாதையை செலுத்தி, மணிமண்டபத்தில் அமையப்பெற்றிருக்கும், அவருடைய வாழ்க்கைக் குறிப்பேடு விவரங்களை நான் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் போரிட்டவர்களில், மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக, வழிகாட்டியாக விளங்குபவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்கட்டும் செவல் – தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து காட்டியவர் பூலித்தேவர். எனவே, அவருக்கு திமுக சார்பில் மரியாதை செய்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகின்றேன்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.

வங்கிகள் ஒருங்கிணைப்பு குறித்து நிர்மலா சீதாராமன் கூறியுள்ள கருத்து பற்றி?

வங்கிகள் ஒருங்கிணைப்பு குறித்து, வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். எனவே, தொடர்ந்து என்ன நடக்கவிருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

முதல்வர் தனியாகவும், அமைச்சர்கள் தனியாகவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

முதல்வர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், 8 அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செல்லப்போவதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கிறன. ஏற்கெனவே, இந்த ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகாலத்தில் இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடந்திருக்கிறது. அந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் 5.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரையில் அது என்ன நிலையை - எப்படிப்பட்ட சூழ்நிலையை அடைந்திருக்கின்றது என்பது பற்றி, ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களும் அதைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அதுகுறித்து எந்த அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாட்டிற்கு ஏதோ பொழுதுபோக்குக்காக செல்வதுபோல் சென்றுள்ளனர். இன்னும் சொல்லவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சரவையை, அதிமுக அமைச்சரவை என்று சொல்ல முடியாது. சுற்றுலா அமைச்சரவைதான் என்று சொல்லவேண்டிய நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.

நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக சம்மதித்தால் போட்டியிடத் தயார் என்று குமரி அனந்தன் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து உங்கள் கருத்து?

அவரவர் விருப்பத்தை, அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவித்ததற்குப் பிறகு திமுக தலைமையும், காங்கிரஸ் தலைமையும் கலந்து பேசி அதற்குப் பிறகு முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x