

சென்னை,
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் (செப்டம்பர் 1) புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அமலாவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்தியாவில் 1939-ல் மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1988-ல்தான் மோட்டார் வாகனச் சட்டம் முதன்முறையாக மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 1974-ல் தமிழக அரசால் சில மோட்டார் வாகன விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா 2017-ம் ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, நிலைக்குழு அளித்த சில பரிந்துரைகளுடன் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவை தேர்வுக் குழு, இது தொடர்பாக எவ்வித பரிந்துரையும் செய்யவில்லை. இதனால், பிரதமர் மோடி தலைமையிலான முதல் ஆட்சியின் போது இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா காலாவதியான நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
புதிய மசோதாவில் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 20 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் புதுப்பித்தல், சாலை பாதுகாப்பை பராமரித்தல், ஊழலை ஒழித்தல், சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் ஆகியவற்றுக்காக இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அபராதம் அதிகரிப்பு
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறையாக இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை ரூ.15,000 ஆக உயர்த்தப்படும். இந்தக் குற்றங்களும் அபராதங்களும் டிஜிட்டல் முறையில் ஓட்டுநரைப் பற்றிய விவரங்களில் சேர்க்கப்படுவதால் அவரால் எதையும் இனி மறைக்க முடியாது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக ஓட்டினால் டூ வீலர் டிரைவர்கள் ரூ.1,000, நடுத்தர ரக வாகன ஓட்டுநர்கள் ரூ.2,000, கனரக வாகன ஓட்டுநர்கள் ரூ.4,000 அபராதம் செலுத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமலும் சீட் பெல்ட் போடாமலும் சென்றால் இப்போது ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இது இனி ரூ.1,000 ஆக வசூலிக்கப்படும்.
வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 முதல் ரூ.2,000 வரை அபராதம், போக்குவரத்து விதிகளை மீறுவது, உரிமம் இல்லாமலோ, ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலோ ஓட்டுவது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் (செப்டம்பர் 1) நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் அமலுக்கு வருவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு இன்னும் அரசாணை பிறப்பிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போக்குவரத்து போலீஸாருக்கு உரிய அறிவுறுத்தல் இல்லாததால் பழைய அபராதத் தொகையே வசூலிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமீறல்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகை இன்று அமலாவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.