

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதின் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் சுமார் 4 அடி அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், அரசுக் கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புப் பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று (31.08.2019) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.
ஆணையாளர் பிரகாஷ் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன் ஆகியோர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் மாநகராட்சி மற்றும் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன் விளைவுகள் குறித்து ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:
“பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களைப் புனரமைத்து புத்துயிர் அளிக்கவும், அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக பல்வேறுவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்திடவும் பயன்பாடற்று உள்ள சமுதாயக் கிணறுகளைக் கண்டறிந்து மழைநீர் இணைப்புகள் ஏற்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பாக வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுநாள்வரை இக்குழுக்களால் 2,72,061 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 1,62,284 கட்டிடங்களில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. சிறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ள 38,507 கட்டிட உரிமையாளர்களுக்கு அப்பணிகளை ஒரு வாரகாலத்திற்குள் மேற்கொண்டு முழுப் பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்பாடற்று உள்ள 238 சமுதாயக் கிணறுகள் கண்டறியப்பட்டு அவற்றில் 47 கிணறுகள் தூர்வாரப்பட்டு அருகாமையில் உள்ள பகுதிகளிலிருந்து மழைநீர் சேகரிக்க இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கிணறுகளை புனரமைக்கும் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோன்று மாநகராட்சிக்குட்பட்ட சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இதுவரை 339 இடங்களில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளினால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 4 அடி அளவிற்கு உயர்ந்துள்ளதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன”.
இவ்வாறு ஆணையர் பிரகாஷ் பேசினார்.
இக்கூட்டத்தில், பருவமழை தொடங்க உள்ள நிலையில் அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை அமைக்கவும் உறை கிணறுகள் அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் ஆணையர் பிரகாஷ் அலுவலர்களுக்கு அறுவுறுத்தினார்.