Published : 31 Aug 2019 03:43 PM
Last Updated : 31 Aug 2019 03:43 PM

20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடி பில்டிங் துறைக்கு அர்ஜுனா விருது: 'பாடி பில்டர்' பாஸ்கரன் மகிழ்ச்சி

சென்னை

20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடி பில்டிங் துறைக்கு விருது வழங்கப்படுவதாக, அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரனுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜுனா விருது வழங்கி சிறப்பித்தார்.

அதன்பிறகு இன்று (சனிக்கிழமை) காலை பாஸ்கரன் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு வீரர்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடி பில்டிங் துறைக்கு விருது வழங்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னைப் போன்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் 'ஃபிட் இந்தியா' திட்டத்தில் தமிழகமும் பங்கெடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

"தமிழகத்தில் உள்ள அனைத்து பாடி பில்டர்களுக்கும் இந்த விருது வரப்பிரசாதமாக இருக்கும். பாடி பில்டிங் துறையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் பாடி பில்டர்களுக்கு இதுவொரு ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன். நான் கஷ்டமான குடும்பத்திலிருந்து வந்தவன். எனக்கு மத்திய அரசு 2000 ஆம் ஆண்டில் வேலை வழங்கி என் வாழ்க்கையை சிறப்பாகத் தொடங்கி வைத்தது. இதேபோன்று, தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்க தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும்", என பாஸ்கரன் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x