

வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். வருமான வரி தாக்கல் செய்ய மேலும் அவகாசம் அளிக்கப்படாது. இன்று ஒருநாள் உள்ள நிலையில் தாக்கல் செய்து அபராதத்தில் இருந்து தப்பிக்கும்படி வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. கடந்த ஜூலை 31 அன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஆக.31 (இன்று) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நாட்கள் மேலும் ஒருமாதம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் பரவி வருகிறது.
இதனால் வருமான வரி தாக்கல் செய்வோரிடையே குழப்பம் ஏற்பட்டது, இதுகுறித்து தெரிவித்துள்ள மத்திய நேரடி வரி வாரியம்(சிபிசிடி) வருமான வரி தாக்கல் செய்யும் தேதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 (இன்று). அதன் பிறகு ஐ.டி.ஆர் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வருமான வரி கணக்கை இன்று தாக்கல் செய்யாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். தமிழகத்தில் வருமான வரித் தாக்கல் செய்வோர்களின் எண்ணிக்கை 71% ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால், வருமான வரி தாக்கல் செய்ய அவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை தாமதமாகத் தாக்கல் செய்பவர்கள் எதிர்கொள்ளவேண்டிய அபராதம் வருமாறு: ரூ. 5 லட்சத்திற்கும் மேல் வருமான வரி உள்ளவர்கள் வரும் டிசம்பர் 31க்குள் வருமான வரியைச் செலுத்தும் பட்சத்தில் ரூ.5000 அபராதம் கட்ட வேண்டும். அடுத்த மார்ச் (2019) 31க்குள் செலுத்த முற்பட்டால் ரூ. 10,000 அபராதமாகக் கட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.