

விழுப்புரம
கடந்த நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த அரசாணை வழங்கப்படவில்லை என தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத்துணை செயலாளர் கலிவரதன் கடந்த ஜூலை 19-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சுப்பிரமணியனிடம் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 2018-19 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு எத்தனை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது? மாவட்ட, மாநில, வெளிமாநில பயிற்சி வகுப்புகளை கண்டுணர எத்தனை சுற்றுலா நடைபெற்றது? எத்தனை விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தை அளிக்குமாறு கேட்டுள்ளார்.
இம்மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆட்சியர் சுப்பிரமணியன் தோட்டக்கலைத்துறைக்கு பரிந்துரை செய்தார்.
இதனை தொடர்ந்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜாமணி , "கடந்த 21.8.2019 ஆம் தேதி கலிவரதனுக்கு பதில் அளித்துள்ள கடிதத்தில் "விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 2018-2019 ஆம் ஆண்டுக்கு விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட, மாநில, வெளிமாநில பயிற்சி வகுப்புகள் மற்றும் சுற்றுலா தொடர்பாக அரசிடமிருந்து இதுநாள் வரையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆணைகள் வழங்கப்படவில்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது" என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலிவரதன் ஆட்சியரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டார்.
அப்போது தோட்டக்கலைத்துறை சார்பில் உயர் அலுவலர் பேசும்போது, "மனுவின் விவரங்களை முழுமையாக உள்வாங்காமல் 2019-2020-க்கான விவரத்தை மனுதாரர் கேட்கிறார் என புரிந்துகொள்ளப்பட்டது" என்றார்.
இதற்கு ஆட்சியர் சுப்பிரமணியன் கூறியது, "மாவட்டத்தில் உள்ள அனைத்து துறையினரும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்கள் அனைத்துக்கும் தரமான பதில் அளிக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.