

திருநெல்வேலி,
வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தை நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசன் தொடங்குகிறார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய கட்டமைப்பு விளக்க கூட்டம் பாளையங்கோட்டையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஆட்சியை கைப்பற்றுவதே எங்கள் இலக்கு. சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசன் தொடங்குகிறார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
புதிய நிர்வாகிகளை நியமிக்க விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு வருகிறது. நேர்காணல் நடத்தப்பட்டு அக்டோபர் மாதத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர்.
மக்களவைத் தேர்தலில் நல்ல வாக்கு பெற்றதால் கடந்த 3 மாதங்களாக பலர் கட்சியில் சேரவும், பதவிகள் வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு தற்போது எடுக்கவில்லை.
தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்பரைக்கான பெரிய அளவிலான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான பலம் மக்கள் நீதி மய்யத்துக்கு உள்ளது என்பதைக் கடந்த மக்களவைத் தேர்தலில் நிரூபித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.