

உதகை
போலீஸ் காவல் காலக்கெடு முடியும் முன்னரே, மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான டேனிஷை கொலக்கொம்பை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் டேனிஷ் என்கிற கிருஷ்ணன்(31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவோயிஸ்ட் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இவரைக் கைது செய்த காவல்துறை, திருச்சூர் சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்த விசாரணையில், நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்கு 2016-ல் ஊடுருவியதில் இவருக்குத் தொடர்பு உண்டு என காவல்துறை உறுதிப்படுத்தியது.
பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, அவர்களை மூளைச் சலவை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து டேனிஷை கைது செய்த கொலக்கொம்பை போலீஸார் இன்று (வெள்ளிக்கிழமை) உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், டேனிஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கேட்டு கொலக்கொம்பை காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி பி.வடமலை, இன்று இரவு 7 மணி வரை 24 மணிநேரம் டெனிஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன் பேரில் கொலக்கொம்பை போலீஸார் டேனிஷை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்ட 24 மணிநேரத்துக்கு முன்னரே பகல் 12 மணியளவில் டேனிஷை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட டேனிஷிடம், நீதிபதி பி.வடமலை, போலீஸார் துன்புறுத்தினரா?, அடிப்படை வசதிகளை செய்துக்கொடுத்தனரா? என கேட்டார்.
அப்போது டேனிஷ், "என்னை போலீஸார் துன்புறுத்தவில்லை. அடிப்படை வசதிகள் செய்துக்கொடுத்தனர். நான் அவர்களிடம் எவ்வித ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கவில்லை. எந்த நபரையோ, பொருளையோ, இடத்தையோ அடையாளம் காட்டவில்லை", என்றார்.
இதை கேட்ட நீதிபதி பி.வடமலை, 12-ம் தேதி வரை டெனிஷை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், அவரை கோவை சிறைக்கு கொண்டு செல்லவும் அடுத்த மாதம் 12-ம் தேதி டேனிஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டார். டெனிஷின் வழக்கறிஞர் கே.விஜயன், டேனிஷிடம் பேசவும், அவருக்கு தேவையான புத்தகத்தை அளிக்க அனுமதிக்க மெமோ தாக்கல் செய்தார்.
அப்போது குறிக்கிட்ட அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார், "இங்கு ஸ்கேன் வசதியில்லாததால், புத்தகத்தின் பிரதி எடுக்க முடியாது. கோவை சிறைத்துறை அதிகாரிகளிடம், தேவையானதை பெறலாம்", என்றார்.
அதற்கு நீதிபதி பி.வடமலை, சிறைத்துறை அதிகாரிகளிடம் தேவையானதை பெற்றுக்கொள்ளுங்கள் என வழக்கறிஞர் விஜயனிடம் தெரிவித்தார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டேனிஷ் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். நீதிமன்றத்துக்கு வெளியே வந்த டேனிஷ் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.