Published : 30 Aug 2019 09:51 AM
Last Updated : 30 Aug 2019 09:51 AM

வேளாண் கருவிகள் வாங்க விவசாயிகளுக்கு 40 முதல் 80 சதவீதம் வரை மானியம் 

த.சத்தியசீலன்

கோவை

தமிழகத்தில் விவசாயத்தில் வேலை ஆட்கள் பற்றாக்குறையை ஈடு செய்யவும், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்ய ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்தவும் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மையை இயந்திரமய மாக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோவை வேளாண்மை பொறியி யல் துறை செயற்பொறியாளர் எஸ்.சோமசுந்தரம் கூறியதாவது:

இத்திட்டத்தில் அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5 லட்சம், பவர் டிரில்லர்களுக்கு ரூ.85 ஆயிரம், சுழற்கலப்பைகளுக்கு ரூ.45 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. பவர் டிரில்லர், விசைக் களையெடுப்பான், புதர் அகற்றும் கருவி, சுழற்கலப்பை, கொத்துக் கலப்பை, திருப்பும் வசதி கொண்ட ஹைட்ராலிக் வார்ப்பு இறகுக் கலப்பை, தட்டை வெட்டும் கருவி ஆகியவற்றுக்கு, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியம் ஆகியவற்றில் எது குறைவோ, அத்தொகை மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதேபோல் சிறு, குறு, தாழ்த்தப் பட்ட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கும், இதர விவசாயிகளுக்கும் அவற்றின் மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப் பட்ட அதிகபட்ச மானியத்தொகை, இவற்றில் எது குறைவோ, அத் தொகை மானியமாகவும் வழங்கப் பட உள்ளது. விவசாயிகளுக்கு அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை குறைந்த வாட கைக்கு கொடுத்து பயன்படுத்தும் வகையில், முன்னோடி விவசாயி கள், விவசாய சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் மூலமாக வாடகை இயந்திர மையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 லட்சம் (40 சதவீதம்) மானியமாக வழங்கப்படும்.

மொத்த மானியத் தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சம், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.3 லட்சம் பிடித்தம் செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மானிய இருப்பு நிதிக் கணக்கில், ஒப்பந்த காலமான நான்கு ஆண்டுகளுக்கு இருப்பு வைக்கப்படும். மீதி மானியத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப் படும். பயனாளிக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை, நான்கு ஆண்டு களுக்குப் பின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரிபார்த்த பிறகு மானிய இருப்புத்தொகை திரும்ப வழங்கப்படும். பண்ணை நடத்துவதற்கு ஆற்றல் குறைவாக உள்ள மாவட்டங்களிலுள்ள கிராமங்களில், 8 உறுப்பினர் கொண்ட விவசாயக் குழுக்களுக்கு வாடகை மையங்கள் அமைக்க 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.8 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இதில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விண்ணப்பிப்பது எப்படி?

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற, முதலில் விவசாயிகள், தமிழக அரசின் உழவன் செயலியில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அவரது விண்ணப்பம் மத்திய அரசின் www.agrimachinery.nic.in என்ற இணையதளத்தில் இணைக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு கோவை உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் ஏ.எஸ்.செந்தில்நாதன் (9487073040), பொள்ளாச்சி உப கோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் எஸ்.ரேணுகாதேவி (9442219140) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x