

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அந்தப் படிப்பு தகுதியற்றது என தெரிய வந்தால் நீக்கம் செய்யப்படும் எனவும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ்பிச்சை தெரிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் இரு மாணவிகள், துறைத் தலைவரும், சிண்டிகேட் உறுப்பினருமான பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் மற்றும் லஞ்சப் புகார் தெரிவித்தனர். தொலைதூர பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு வணிக நோக்கில் தகுதியற்றதாக உள்ளது எனவும், அதனை நீக்க வேண்டும் எனக் கோரியும் முழு நேர ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் மீது அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், துணைவேந்தர் ஞா.ஜேம்ஸ்பிச்சை செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாரதியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை தலைவர் சரவணசெல்வன் மீது ஆராய்ச்சி படிப்பு மாணவிகள் அனிதா ரஞ்சன், எலசம்மா செபஸ்டின் ஆகிய மாணவிகள் அளித்த புகார்கள் குறித்து சிண்டிகேட் உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும், பல்கலைக்கழகம் சட்ட விதிகளின்படியே நடக்கும் என்பதற்குச் சான்றாக நன்னடத்தைக் குழுவிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 30 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
ஏற்கெனவே, புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், மாணவிகள் அளித்த புகாரில் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது. பல்கலைக்கழகத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்படும்.
அதேபோல், பிரிவு பி ஆராய்ச்சிப் படிப்பில் தரம் இல்லை என்ற புகார் தொடர்பாக 10 பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தக் குழுவில் உள்ள பேராசிரியர்கள், பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு தகுதியற்றது என கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் கருத்துகள் விரைவில் ஆராயப்படும்.
அந்த படிப்பில் நடைமுறைகளில் தவறுகள் இருந்தால் அது கவனிக்கப்படும். தரமற்ற வகையில் இருப்பின் ரத்து செய்யப்படும். தரமற்ற படிப்பை ஒருபோதும் இந்த பல்கலைக்கழகம் வழங்காது என்பதை உறுதி அளிக்கிறேன். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.
பேராசிரியர்கள் சிலர் சதி
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் செய்தியாளரிடம் பேசிய பின்னர், ஆங்கிலத்துறைத் தலைவரும், சிண்டிகேட் உறுப்பினருமான சரவணசெல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, ‘என் மீது பாலியல் புகார் அளித்த மாணவி அனிதா ரஞ்சன், கடந்த 2010-ம் ஆண்டில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்தார். நான் அவருக்கு வழிகாட்டும் பேராசிரியர் கூட கிடையாது. இதற்கிடையே, 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி படிப்புக்கு அவர் வரவில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், துணைவேந்தரை சந்தித்து கருணை அடிப்படையில் மீண்டும் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். அவரது நிலைமையைக் கருதி, துணைவேந்தரும், துறைத் தலைவராகிய நானும் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர அனுமதி வழங்கினோம்.
அவரும், பல்கலைக்கழகம் வந்து படித்து வந்தார். இதற்கிடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என் மீது திடீரென பாலியல் புகார் தெரிவித்து துணைவேந்தரிடம் கடந்த மார்ச் மாதம் மனு அளித்தது தெரிய வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், இந்த புகாரின் பின்னணியில் சில பேராசிரியர்கள் இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் மாணவி அளித்த புகார் குறித்து காவல்துறை மூலம் விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் என குரல்வழிப்பூர்வமாக துணைவேந்தரை சந்தித்து புகார் தெரிவித்தேன்.
அதை மீண்டும் வலியுறுத்தி ஜூன் மாதத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். ஆனால், அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
இதேபோல், மாணவி எலசம்மா செபஸ்டின் தாக்கல் செய்த குரல் வழி ஒப்புவித்தலில் (வைவா) நடைமுறைத் தவறுகள் இருந்ததால் மறு வைவா தாக்கல் செய்யுமாறு தெரிவித்தோம். இந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் தெரிவித்துவிட்டார். இந்த இரு புகார்களிலும் உண்மை இல்லை என்பது விரைவில் தெரியவரும் என்றார்.
இதனிடையே, துறைத் தலைவர் சரவணசெல்வன் அளித்த இரு புகார்கள் தொடர்பாக நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்ததாகவும், பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவிகள் வரட்டும் அதன்பின்னர் முழு விசாரணையை மேற்கொள்ளலாம் என இருந்ததாகவும், அதற்குள் மாணவி ஊடகங்களிடம் சென்றுவிட்டதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்வாசன் தெரிவித்தார்.