

சென்னை
7 பேர் விடுதலையில் அதிமுகவிற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை, ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காங்கிரஸுக்கு பயந்து ஒரு இனத்தையே காவு கொடுத்தவர்கள் திமுகவினர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று கூறியவர்கள். ஆனால் எங்களுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. நல்ல நோக்கத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றினார். 7 பேரை விடுதலை செய்யக்கோரி தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். அது உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.
அதன் வழிகாட்டுதலில் ஞாயிற்றுக்கிழமை அன்றே கேபினெட் அமைச்சரவையைக் கூட்டி, எழுவரை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைத்தோம். ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டதால், அதை அவருக்கு அனுப்பினோம்.
ஆளுநரை நாம் கட்டாயப்படுத்தவோ, நிர்பந்தப்படுத்தவோ முடியாது. அவர் இதுகுறித்து நல்ல முடிவெடுப்பார். அவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் கூடத் தலையிட முடியாது. 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலை.
திறந்த புத்தகம் போலவே முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் அமைந்திருக்கிறது. ஆனால் ஸ்டாலின் பிரேசில் சென்றபோது ஏன் அரசிடம் அனுமதி பெறவில்லை? திருட்டுத்தனமாக வெளிநாடு சென்றது ஸ்டாலின்தான்.
பொருளாதார ஏற்ற இறக்கம் என்பது பொதுவாகவே உலக அளவில் இருக்கும். இந்த நிலை தற்காலிகமே. ரிசர்வ் வங்கியை நிதி அளிக்கச் சொல்லி, யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது'' என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.