

சென்னை
பியூஷ் மனுஷ் ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் நேற்று (ஆக.28) மாலை 5 மணி அளவில் மரவனேரியில் உள்ள சேலம் மாநகர மாவட்ட பாஜக அலுவலகத்து சென்றார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் பொருளாதார பின்னடைவு, காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதை தனது பேஸ்புக் முகவரியில் வீடியோ மூலம் நேரலை செய்தார். இதனால் அவருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இது கைகலப்பாக மாறியதில் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீஸார், பியூஸ் மானுஷை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், தன்னை பாஜகவினர் தாக்கியதாக பியூஸ் மானுஷ் புகார் செய்தார். இதுபோல பாஜக தரப்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம், பாஜக அலுவலகத்துக்குள் அத்து மீறி நுழைந்து கலாட்டா செய்து நிர்வாகிகளை தாக்கியதாக பியூஸ் மானுஷ் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சேலத்தில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் பாஜகவினரால் தாக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. காவல்துறையினரின் கண்ணெதிரிலேயே இச்சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தாக்கியதற்குப் பதிலாக காவல்துறையினரை வைத்து அவரை வெளியேற்றி இருக்கலாம்.
அதே நேரத்தில், ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கும் போது ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்திற்குள் நுழைந்து இப்படி நடந்து கொள்வது ஏற்புடையதல்ல. இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்,", என தெரிவித்துள்ளார்.