Published : 29 Aug 2019 02:28 PM
Last Updated : 29 Aug 2019 02:28 PM

பியூஸ் மானுஷ் மீது தாக்குதல்; தமிழக பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை இல்லை: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை

சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடுமையாக தாக்கப்பட்டிருப்பதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் காணாத அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக மத்திய பாஜக அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் இத்தகைய மதிப்பீட்டை மிகுந்த கவலையோடு வெளிப்படுத்தியிருக்கிறார். இன்று ஏற்பட்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சி முன் எப்பொழுதும் ஏற்படாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் பொருளாதார அமைப்புகள் அச்சுறுத்தலுக்கும், பீதிக்கும் ஆளாகியிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

யாரையும், யாரும் நம்புவதில்லை. அமைப்புகள் மீது நம்பிக்கை இழக்கப்பட்டு வருகிறது. தனியார் துறை மிகுந்த அச்சத்திற்கு இடையே இருந்து வருகிறது. பணம் வைத்திருப்பவர்கள் முதலீடு செய்யத் தயாராக இல்லை என்றும் கவலையோடு கூறியிருக்கிறார். இதைவிட வேறு யாரும் பொருளாதார மந்தநிலை குறித்து படம் பிடித்துக் காட்ட முடியாது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கிறது. பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு போன்றவற்றின் காரணமாக உற்பத்தி குறைந்து வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, உலக அரங்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றுவிட்டது. இதனால் 2018-19 இல் இந்தியாவின் மொத்த உற்பத்தி 6.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கை தான் காரணமாகும்.

இதை மறைப்பதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பிடுகிற முறையை மாற்றி, புதிய முறையை அறிமுகப்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2011-12 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2016-17 ஆம் ஆண்டு முதல் புதிய அணுகுமுறையின்படி 2.5 சதவீதம் அதிகரித்து தவறான புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தவறான பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டதால் இன்றைக்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, மிகக் கடுமையான பாதிப்புக்கு நாட்டு மக்கள் ஆளாகி வருகிறார்கள்.

மிகுந்த வேலை வாய்ப்பை உருவாக்குகிற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. வாகன விற்பனை 2018 ஆம் ஆண்டை விட, ஜூன் 2019 இல் 23 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த ஜனவரியில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 87 வாகனங்கள் விற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 461 வாகனங்களாக குறைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். கார், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் விற்பனை கடுமையாக குறைந்திருக்கிறது. இத்தகைய பாதிப்பினால் உதிரி பாகங்கள் உற்பத்தித் தொழில் பாதிக்கப்பட்டு 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிய வாகனங்கள் விற்பனை சரிவு காரணமாக வட்டார போக்குவரத்து பதிவு அலுவலகங்களில் ஐம்பது சதவீத பதிவு குறைந்திருக்கிறது. நாற்பது சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னையை சுற்றியுள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் மட்டும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் ஹீரோ தொழிற்சாலையில் வாரத்தில் நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் இத்தகைய தொழிற்சாலைகளில் 15 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றனர்.

அதேபோல, ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, முக்கியத்துவம் வாய்ந்த 30 நகரங்களில் கணக்கிட்டதில் மார்ச் 2018 இல் விற்கப்படாத குடியிருப்புகள் 10 லட்சத்து 20 ஆயிரம். கடந்த மார்ச் 2019 இல் அது, 12 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவை 2024-25 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதார நாடாக வளர்த்துக் காட்டுவேன் என்று உரத்த குரலில் பேசிய பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தமது சொந்த நாட்டில் ஏற்பட்டு வருகிற பொருளாதாரச் சீரழிவு குறித்து அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை மத்திய அரசின் கணக்கில் மாற்றியிருப்பது தவறான முன்னுதாரணமாகும். ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு தங்கம், டாலர், அரசின் கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு ஆகியவற்றின் மதிப்பைப் பொறுத்தே அமைகிறது. எனவே, உபரி என்பது மறைமுகமாக உள்ளதே தவிர, நேர்முகமாக உள்ளது அல்ல. தங்கத்தின் விலையோ, டாலரின் மதிப்போ குறையும் போது உபரித் தொகையும் அதற்கு ஏற்றாற்போல குறைந்துவிடும்.

பொருளாதாரத்தின் நிலை சீர்குலையும் போது, அதை சரிப்படுத்துவதற்கு இந்த உபரித் தொகையைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லாத வகையில் மத்திய அரசு இந்தத் தொகையை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மத்திய ரிசர்வ் வங்கியின் அடித்தளமே ஆட்டம் காண்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல, இந்தியாவில் நிலவுகிற பொருளாதார மந்தநிலை குறித்து விளக்கம் கேட்பதற்காக சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேரில் சென்ற சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். இவரை கடுமையாக தாக்கியதோடு, செருப்பு மாலை அணிவித்து பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தமிழக பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையில் செயல்பட்டவர் மீது இத்தகைய தாக்குதலை பாஜகவினர் கட்டவிழ்த்திருப்பதைக் கண்டிக்கிறேன்", என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x