

உதகை
குன்னூர் கொலக்கொம்பை அருகே நெடுகல்கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, மூளைச் சலவை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கோவையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் டெனிஷ் என்கிற கிருஷ்ணன் (31). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாவோயிஸ்ட் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இவரைக் கைது செய்த காவல்துறை, திருச்சூர் சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்த விசாரணையில் நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்துக்கு 2016-ல் ஊடுருவியதில் இவருக்குத் தொடர்பு உண்டு என காவல்துறை உறுதிப்படுத்தியது. பழங்குடியினர் இடையே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, மூளைச் சலவை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து டெனிஸை உதகை மாவட்ட நீதிமன்றத்துக்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர். பலத்த பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.