

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், மீன்களுக்கு உணவாகும் வகையிலும் 350 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் மும்முரமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அரசும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைத் தயாரித்து நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் 250 விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன. அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ், தானிய மாவு, மரத்தூள் என தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய, மீன்களுக்கு உணவாகும் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ரசாயன பெயிண்டுகளைப் பயன்படுத்தாமல், எளிதில் கரையக்கூடிய வாட்டர் கலர் மூலம் சிலைகளை அழகுபடுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி கூறும்போது, ’’ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 அடி முதல் 9 அடி உயரத்திலான 350 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 150 சிலைகள் ராமேசுவரத்திலும், 100 சிலைகள் பரமக்குடியிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மீதி 100 சிலைகள் வெளி மாவட்டங்களிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தமிழகத்தில் சதுர்த்தி விழா இந்து முன்னணி சார்பில் ‘தெய்வீக தமிழைப் காப்போம், போலித் தமிழ் இன வாதத்தை முறியடிப்போம்’ என்ற கருப்பொருளுடன் விழா கொண்டாடப்படுகிறது. சிலை தயாரிப்பின் மூலப்பொருளாக காகிதக் கூழ் இடம் பெற்றுள்ளது.
விநாயகர் சிலைகள் செப்டம்பர் 2-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் 3-ம் தேதி ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதியிலும், 4-ம் தேதி ராமநாதபுரம், தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் கரைக்கப்படவுள்ளன. மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தேவையான பந்தல், பூஜை பொருட்கள், மின்சாரம் அனைத்தையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசிடம் முன்வைத்துள்ளோம்’’ என்றார்.