திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்:திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம்:திரளான பக்தர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழாவான நேற்று காலை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திருக்கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை , திருவாவடுதுறை ஆதீனம் சுவாமிநாத தம்பிரான் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் வடம் பிடிக்க காலை 5.40 மணிக்கு பிள்ளையார் ரதம் புறப்பட்டு நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.10 மணிக்கு நிலைக்கு வந்தது. தொடர்ந்து காலை 6.15 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் எழுந்தருளிய பெரிய தேர் புறப்பட்டு வீதி உலா வந்து காலை 7.15 மணிக்கு நிலைக்கு வந்தது.
அதன்பிறகு காலை 7.20 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து 8 மணிக்கு நிலையினை சேர்ந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரவில் சுவாமி, அம்மன் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்கின்றனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணைர் சி.குமரதுரை மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in