Published : 29 Aug 2019 11:39 AM
Last Updated : 29 Aug 2019 11:39 AM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை; ‘அமைதி காத்தல்’ எனும் கலாச்சாரத்தை மாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்: த்ரிஷா

யுனிசெஃப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்தியத் திரைப்பட நட்சத்திரமான த்ரிஷா, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் முடிவுக்குக் கொண்டுவர இளைஞர்கள் இதுகுறித்துப் பேசவும், செயல்படவும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் .

சென்னை ஆழ்வார்பேட்டையில் யுனிசெஃப் நிறுவனம், தோழமை மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல் குறித்து இளைஞர்கள் மத்தியில் த்ரிஷா பேசினார்.

அப்போது த்ரிஷா பேசியதாவது:

“2014 முதல் 2016 வரை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி , 2014 ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9,000. 2015 -ம் ஆண்டில் 15,000 வழக்குகள். 2016-ம் ஆண்டில் 36,000 வழக்குகளாக அதிகரித்துள்ளது.

குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைகளுக்குத் தெரிந்த நபரால் செய்யப்படுகின்றது, பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95% பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள். இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது .

சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்கத் தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சபதம் ஏற்கவும், செயல்படவும், இந்திய மக்கள்தொகையில் 40 % சதவீதமாக இருக்கும் இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.

குற்றவாளிகளை இவ்வகையான கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிக்க ஊக்குவிக்கும் ஒரு செயலான, பல ஆண்டு காலங்களாக இருந்து வரும் ‘அமைதி காத்தல்’ எனும் கலாச்சாரத்திற்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும்”.

இவ்வாறு த்ரிஷா பேசினார்.

யுனிசெஃப் நிறுவனத்தின் தகவல்தொடர்பு வல்லுநர் சுகட்டா ராய் பேசுகையில், ''வளரும் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அவர்களின் வாழ்வைப் பாதிக்கும் விஷயங்களில் ஓங்கி ஒலிப்பதில்லை. அவர்களுக்காக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்க ஊக்கப்படுத்தப்படவில்லை.

அது பெயரளவிற்கானாலும் சரி, முக்கியத்துவமானதாக இருந்தாலும் சரி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஒலிக்கும் இதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் பங்கேற்பதும் , பேசுவதும் ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சரியான தருணம் இதுவாகும்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் இந்தச் செயலானது ஒரு தனித்துவமான மற்றும் யுனிசெஃப் மற்றும் ஐக்கிய நாட்டு நிறுவனங்கள், அரசாங்கம், அரசு சாரா நிறுவனங்கள் இளைஞர்கள் மற்றும் சாதனையாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாகும். இவர்களது குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அது இந்த உலகை குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவது" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x