

சேலத்தில் பாஜக அலுவலத்தில் தகராறில் ஈடுபட்ட பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ் நேற்று மாலை 5 மணி அளவில் மரவனேரியில் உள்ள சேலம் மாநகர மாவட்ட பாஜக அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மத்திய அரசின் பொருளாதாரப் பின்னடைவு, காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ மூலம் நேரலை செய்தார். இதனால் அவருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இது கைகலப்பாக மாறியதில் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீஸார், பியூஸ் மானுஷை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இரு தரப்பினரும் மாறி மாறிப் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ''பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ், சேலம் பாஜக அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே பியூஸ் மானுஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்'' என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ''சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன் போன்ற அப்பாவி பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் வெட்டி சாய்த்தும் கோவையில் குண்டு வைத்துக் கொலைவெறித் தாண்டவமாடிய பாவிகளுக்கும் ஓட்டு வங்கி அரசியலுக்காக பரிந்து பேசும் திமுகதான், தங்கள் குடும்பத்திற்குள் நடைபெற்ற பதவி கவுரவம் பற்றிய வம்புச்சண்டைக்காக மதுரையில் தினகரன் அலுவலகத்தில் அப்பாவி பத்திரிகையாளர்களை உயிர்ப் பலி வாங்கியதையும் தமிழகம் நினைவு கூரும்'' என்று தெரிவித்துள்ளார்.